7 டன் செம்மரம் கடத்தல் வழக்கில் தொடர்பு: டிஎஸ்பி தங்கவேலு நிரந்தர நீக்கம்


டிஎஸ்பி தங்கவேலு

வேலூர்: ஆம்பூர் அருகே கோழிப் பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 7 டன் செம்மரக் கட்டைகளை கடத்திய வழக்கில் தொடர்புடைய வேலூர் கலால் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அதில், வேலூர் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலு, சின்னபையனுக்கு சொந்தமான கோழி பண்ணையில் இருந்த 7 டன் செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. அந்த செம்மரக் கட்டைகளின் உரிமையாளர் செம்மரக் கட்டைகளை தேடி வந்தபோது காவல் துறையினர் பறிமுதல்செய்து எடுத்துச் சென்றதை கூறியுள்ளார்.

அதை நம்பாத கடத்தல் கும்பல், சின்னபையனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பெருமாள், தங்கராஜ், சத்தியமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணையில், தங்க வேலுவின் உதவியுடன் சின்னபையனின் கோழிப் பண்ணையில் இருந்து 7 டன் செம்மரங்களை கடத்தி சென்றதாக வேலூர் அலுமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், சின்னபையனின் கோழிப் பண்ணையில் எடுத்துச்சென்ற 7 டன் செம்மரக் கட்டைகளில் 3.5 டன் அளவுக்கு நாகேந்திரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.32 லட்சம் பணம் மற்றும் 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

வேலூர் கலால் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு கூறியதன் அடிப்படையில் சின்னபையனின் கோழிப் பண்ணையில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்று தாங்கள் பங்கிட்டுக்கொண்டதாக நாகேந்திரன் தம்பதியினர் தெரிவித்தனர். ஏற்கெனவே, தனக்கு சொந்தமான செம்மரக் கட்டைகளை சின்னபையன் வேறு நபர்களுக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றியதையும் நாகேந்திரன் காவல் துறையினரிடம் கூறினார்.

இதையடுத்து, தங்கவேலுவை கைது செய்த காவல் துறையினர் அவரை வழக்கின் மூன்றாவது குற்றவாளியாக சேர்த்தனர். பி்ன்னர், தங்கவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை ஆம்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

x