போளூர் சட்டப்பேரவை தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தும் அமைச்சரின் மகன்!


போளூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், ஆரணி மக்களவை உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தனுக்கு இணையாக ஆளுயர மாலை அணிவித்து அமைச்சரின் மகன் எ.வ.வே.கம்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை: போளூர் சட்டப்பேரவை தொகுதியில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திமுகவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருப்பவர் எ.வ.வேலு. எதிலும் வல்லவர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, இன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரால் பாராட்டப்பட்டவர். தலைமைக்கு விசுவாசமாக உள்ளதால் அமைச்சரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை என முக்கியத்துவம் வாய்ந்த 3 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு மற்றும் க.பொன்முடி ஆகியோரது வாரிசுகள் மக்கள் பிரதிநிதியாகவும், கட்சியில் முக்கிய பதவியிலும் உள்ளனர். மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பில் பொய்யாமொழியின் மகனான அன்பில் மகேஸ்-க்கு பள்ளி கல்வி துறையும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களது வரிசையில் தனது வாரிசான எ.வ.வே.கம்பனும் இடம்பெற எ.வ.வேலு விரும்பினால், அதை கட்சியும் வரவேற்கும் என தெரிகிறது. துணை முதல்வர் பதவியில் மிக விரைவில் அமரப்போகிறார் என உதயநிதி ஸ்டாலின் பற்றி பேச்சு உள்ள நிலையில், எதிர்காலத்தில் அவருக்கு பக்க பலமாக நிற்க அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வேகம் மிக்க இளைஞர்கள் முன் நிறுத்தப்பட வேண்டும் என திமுக மேல்மட்டத்தில் திட்டங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, "தனது மகன் கம்பனுக்காக நேரடியாக தேர்தல் வாய்ப்பு மற்றும் கட்சியில் பதவி என கேட்டு பெறுவதைவிட, முதலில் தொண்டர்களுடன் நெருங்கி பழகி அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என ஆரம்பத்திலேயே அமைச்சர் எ.வ.வேலு நினைத்தார். இதனையேற்று, கம்பனும் கட்சி நடவடிக்கைகளில் பின்புலமாக இருந்து நிர்வாகிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் கலசப்பாக்கம் ஒன்றிய களப்பணியில், தந்தையின் அறிவுரையை ஏற்று எ.வ.வே.கம்பன் செயல்பட்டார். அப்போது ஏற்பட்ட, கடும் நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டு, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றி, தந்தை நடத்திய முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றார் கம்பன். இதன்மூலம், கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் கவனம் செலுத்தினார்.

இந்த தொகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சுப, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால், கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், கலசப்பாக்கம் தொகுதியில் எ.வ.வே.கம்பன் போட்டியிடுவார் என்ற நம்பிக்கையுடன் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவர் இரா.தரன், திமுகவின் மூத்த முன்னோடியாக இருந்த முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடத்தின் மகனான பெ.சு.தி.சரவணன் ஆகியோர்தான் வேட்பாளர் ஆவதற்கான தீவிர முயற்சியில் இறங்கினர். அதில், பெ.சு.தி.சரவணனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு எ.வ.வேலுவும் ஒரு காரணமாக இருந்து, அவரை வெற்றி பெறவும் செய்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், 3 துறைகளை கவனித்து வந்ததால், தமிழகம் முழுவதும் செல்ல வேண்டிய நிலை, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஏற்பட்டது. இதனால், திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில், எ.வ.வே.கம்பனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகள், ஆய்வு பணிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் என அனைத்திலும் முன்னிலை படுத்தப்பட்டார்.

சமீபத்தில், நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்ட முகாமில் முக்கிய விருந்தினராக அமர வைக்கப்பட்டார். இவரது களப்பணி கலசப்பாக்கம், செங்கம் தொகுதிகளில் தொடர்ந்தது. அதேநேரத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டியின் தொகுதியான கீழ்பென்னாத்தூரில் நுழையாமல் கவனத்துடன் செயல்படுமாறு கம்பனுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வே.கம்பன் போட்டியிடப்போவதாக தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே மீண்டும் ஒரு பேச்சு எழுந்தது. ஆனால், அமைச்சர் எ.வ.வேலு தரப்பில் இருந்து வெளிப்படையான கருத்து எதுவும் வெளியாகவில்லை.

கடைசியில், திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளராக சி.என்.அண்ணாதுரைக்கு, கட்சி தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கி வெற்றி பெற செய்தது. கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி மற்றும் திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளில் போட்டியிடாத நிலையில், போளூர் சட்டப்பேரவை தொகுதியில் எ.வ.வே.கம்பன் கடந்த ஓரிரு மாதங்களாக கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இங்குள்ள கட்சி நிர்வாகி களுடன் ஆலோசனை, தொண்டர்களுடன் நெருங்கி பழகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். சுப, துக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். போளூர் தொகுதியில் ஒன்றியம் வாரியாக நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டங்களை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

செல்வாக்கு, பணபலம் இருப்பதால், எதையும் சமாளிக்க கூடிய திறன் அவர்களிடம் உள்ளன. அமைச்சர் எ.வ.வேலுவின் மன ஓட்டத்தில் என்ன இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்" என்றனர்

அதோடு, எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் அவரோடு தனக்கு உள்ள நெருக்கம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன விதமும், முதல்வர் ஸ்டாலினுக்கு வேலு மீதான அபிப்பிராயத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளதாகவும், விரும்பினால் தனது மகனுக்கு ‘சீட்’ பெறுவது வேலுவுக்கு பெரிய காரியமாக இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

x