அங்கும்... இங்கும்... எங்கும்... சீர்மிகு சேலம் மாநகரில் சீரழிந்த சாலைகளால் பாதிப்பு!


சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மயானம் வழியாக சின்னபுத்தூர் செல்லும் திருமணிமுத்தாறு தரைப்பாலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. | | படங்கள்: எ ஸ். குருபிரசாத் |

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் படுமோசமான நிலையில் சாலைகள் சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்த மாநகரமாக விளங்குகிறது. இங்கு 10 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், நாள்தோறும் வெளிமாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து 2 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, உள்கட்டமைப்பு வசதி, அபிவிருத்தி திட்டப்பணிகளுக்காக மத்திய அரசு ரூ.980 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் 50 சதவீதம் பணிகள் ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட திட்டங்களுக்காக பயன்படுத்தி, புதிய திட்டங்களுக்காக சொற்ப நிதியை செலவிடுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர் என உயர்மட்டத்தில் இருப்பவர்கள் சென்று வரும் சாலைகளை உடனுக்குடன் சீர்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம் சாதாரண மக்கள் பயன்படுத்தும் சாலைகளை கண்டு கொள்வதில்லை.

சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தார் சாலை சேதமடைந்து
குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆயிரம் பேருந்துகள் வரை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன. ஆனால், பேருந்து நிலையத்தின் உள் பகுதி மற்றும் பேருந்துகள் வந்து செல்லும் பகுதிகளில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளன. அவசர அவசரமாக பேருந்தை பிடிக்க ஓடும் பயணிகள் பலரும் இந்த பள்ளமான சாலையில் விழுந்து காயமடையும் அவலம் வழக்கமாகி உள்ளது.

மிக முக்கியமான பகுதியாக விளங்கும் அண்ணாபூங்காவுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழந்தைகளுடன் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். அண்ணா பூங்காவில் இருந்து காந்தி விளையாட்டு மைதானம் செல்லும் சாலை விபத்துக்காக காத்திருப்பதை போன்று குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள விபத்தில் சிக்குகின்றன.

சேலம் தொங்கும் பூங்காவிலிருந்து மகாத்மா காந்தி
விளையாட்டு மைதானம் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால்
\வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மயானம் வழியாக சின்னபுத்தூர் செல்லும் பாதையில் திருமணிமுத்தாறு தரைப் பாலத்தை கடந்து செல்லும்போது ஒரு நாளைக்கு சராசரியாக 10 பேர் விபத்தில் சிக்கும் அளவுக்கு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தரை பாலத்தை சீர்படுத்திட வேண்டும் என்றும் உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

சேலம் திருச்சி மெயின் ரோடு, அம்மாப்பேட்டை பிரதான சாலை, தாதகாப்பட்டி , தாதுபாய்குட்டை ரோடு, கிச்சிப்பாளையம், எருமாபாளையம் செல்லும் சாலைகள், சன்னியாசி குண்டு சாலை என மாநகரின் பல சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன. அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக மாநகர பகுதியில் மிகவும் பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x