ஈரோடு ஜவுளிச் சந்தை வணிக வளாகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் வாகன நிறுத்துமிட கட்டண விவகாரம்


ஈரோடு: ஈரோடு கனி ஜவுளிச்சந்தை வணிக வளாகத்தில், வாகன நிறுத்துமிட கட்டண நிர்ணய விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் விரைவான தீர்வை ஏற்படுத்த வேண்டும், என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், ரூ. 60 கோடி மதிப்பீட்டில், அப்துல்கனி ஜவுளிச் சந்தை வளாகம் கட்டப்பட்டுள்ளது.

மூன்று தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில், 420 கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த ஐந்து மாதங்களாக இயங்கி வருகின்றன. தற்போது வாகன நிறுத்துமிட கட்டண விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஜவுளிச்சந்தை வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் கீழ் தளங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள், ஊழியர்கள் வாகனங்களை நிறுத்த கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வியாபாரிகளால் முன் வைக்கப்படுகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜவுளி வணிக வளாகத்தின் நுழைவுவாயிலை மூடி, கடந்தவாரம் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, வணிக வளாக கதவைத் திறந்து விட்டதுடன், வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து கனி ஜவுளிச்சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, இதே இடத்தில் கொட்டகை அமைத்து கடைகளை நடத்திய போது, மாநகராட்சிக்கு வரி செலுத்தியது போக, கணிசமான லாபம் கிடைத்து வந்தது. இதனால், இந்த தொழிலை தொடர்ந்து எங்களால் நடத்த முடிந்தது.

ஆனால், தற்போது நவீன வணிக வளாகத்தில், லட்சக்கணக்கில் முன்பணம், வாடகை செலுத்தும் நிலையில், எதிர்பார்த்த அளவில் வியாபாரம் நடக்கவில்லை. வாகன நிறுத்துமிட கட்டணம் அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தின் உள்ளே வர மறுக்கின்றனர்.

இந்த வணிக வளாகத்தில், முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடாக பெற்ற 107 கடைக்காரர்கள், தலா ஒரு வாகனத்தை, கட்டணமின்றி நிறுத்திக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வியாபாரிகள், கடை ஊழியர்களின் வாகனங்களை நிறுத்த, 4 மணி நேரத்துக்கு ரூ.20 என கட்டணம் கேட்கின்றனர்.

ஏற்கெனவே விற்பனை பாதிப்பால் நலிவடைந்த நிலை யில், வாகனக்கட்டணமாக பெரும் தொகையை செலுத்த முடியாது. எனவே, எங்களுக்கு கட்டணமின்றி வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாகன நிறுத்த கட்டணத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

கனி ஜவுளிச்சந்தை வணிக வளாகத்தில் வாகன நிறுத்துமிட குத்தகைதாரர்கள் கூறியதாவது: வணிக வளாகத்தில், வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூலிக்க, ஆண்டுக்கு ரூ.56 லட்சம் குத்தகை செலுத்தி ஒப்பந்தம் பெற்றுள்ளோம்.

மாநகராட்சியுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, இரு சக்கர வாகனங்களுக்கு, 4 மணி நேரத்துக்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு, ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் உட்பட யாருக்கும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு பெற்ற 107 பேருக்கு மட்டும், தலா ஒரு வாகனத்தை கட்டணமின்றி நிறுத்த இடம் ஒதுக்கித் தருமாறு, மாநகராட்சி சார்பில் வாய்மொழியாக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்று இடம் ஒதுக்கப்பட்டது. இதே சலுகையை கடை வைத்துள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாங்களும் கடந்த 5 மாதங்களாக அவர்களிடம் கட்டணம் வாங்கவில்லை.

இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால், எங்கள் மீது குற்றம் சுமத்தலாம். ஆனால், நிர்ணயித்த கட்டணத்தைக் கூட வசூலிக்க எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இப்பிரச்சினை தொடர்பாக, கனிஜவுளிச்சந்தை வளாக வியாபாரிகள், வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர், மாநகராட்சி மேயர், ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், மாநகராட்சி குத்தகைத் தொகையைக் குறைத்தால், கட்டணக்குறைப்புக்கு சாத்தியம் உள்ளது என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, கடைக்காரர்களின் வாகனங்களுக்கு 24 மணி நேரத்துக்கு ரூ. 20 என்ற அடிப்படையில், ஒரு வாகனத்துக்கு, மாதம் ரூ.600 செலுத்தி பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்தையும் ஒப்பந்ததாரர் தரப்பு தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு வாகனக் கட்டணமாக ரூ.10 என நிர்ணயம் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஜவுளி நகரான ஈரோட்டின் இதயப்பகுதியில் இயங்கும் புகழ்பெற்ற கனி ஜவுளிச்சந்தை வளாகத்துக்கு வாடிக்கையாளர்கள் வருகையும், அங்கு நடக்கும் ஜவுளி விற்பனையும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்யக் கூடியதாகும். எனவே, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை எட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

x