வேம்பார் கடல் பகுதியில் சிலிண்டர் உதவியுடன் சூறையாடப்படும் கணவாய் மீன்கள்!


வேம்பார் கடலில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள்.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடல் பகுதியில் சிலிண்டர் உதவியுடன் கடலுக்குள் இறங்கி கணவாய் மீன்கள் பிடிக்கப்படுவதால், பாரம்பரிய மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், சிப்பிகுளம், தருவைகுளம் ஆகிய கடலோர கிராமங்களில் கணவாய் மீன்பிடித் தொழிலில் சுமார் 3 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தினமும் பகலில் விசைப் படகில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று, படகை நிறுத்திவிட்டு தெர்மாகோல் மிதவையை கடலில் போட்டு அதில் அமர்ந்து தூண்டில் மூலம் கணவாய் மீன்களை பிடித்து வருகின்றனர். இவர்கள் வேறு மீன்களை பிடிப்பதில்லை.

இந்நிலையில், வேம்பார் கடலில் இருந்து விசைப்படகுகளில் செல்லும் சிலர் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய முகக்கவசங்களை அணிந்து கொண்டு, கடலில் இறங்கி கணவாய் மீன்களை கைகளால் பிடித்து வருகின்றனர்.

அதிலும், பவளப்பாறைகளுக்கு இடையே முட்டையிட்டு குஞ்சு பொரிக்க காத்திருக்கும் கணவாய் மீன்களை பிடித்து வருவதால், அந்த மீன் இனமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என பாரம்பரியமாக கணவாய் மீன்பிடிக்கும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி சென்ற வேம்பார் தூய ஆவி நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள், மீன்துறை உதவி இயக்குநரிடம் மனு அளித்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து வேம்பாரைச் சேர்ந்த மீனவர்கள் எஸ்.வெர்ஜின், எஸ்.சுதாகர் ஆகியோர் கூறியதாவது: நாங்கள் பாரம்பரியமாக கணவாய் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏர் சிலிண்டர் உதவியுடன் கடலுக்குள் இறங்கி கணவாய் மீன்களை சிலர் பிடிக்கின்றனர்.

வேம்பாரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 16 பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று, அரசால் தடை செய்யப்பட்ட கணவாய், நண்டு, சங்கு, திருக்கை, சிங்கி இறால் ஆகிய நீர்வாழ் உயிரிரனங்களை பிடித்து வருகின்றனர். மேலும், பவளப்பாறைகளுக்கு இடையே இருக்கும் பெரிய மீன்களை சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கின்றனர்.

நாங்கள் கடலின் மேற்பரப்பில் தெர்மாகோல் மிதவையில் அமர்ந்து தூண்டில் வீசி கணவாய் மீன் பிடிக்கிறோம். கணவாய் மீன்கள் சிக்கினால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். சிக்காவிட்டால் நாங்கள் வெறும் கையுடன் தான் திரும்ப வேண்டும்.

இது குறித்து மீன்துறை உதவி இயக்குநருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் எங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

இது தொடர்பாக எம்.பி. வரை புகார் தெரிவித்துள்ளோம். தொழிலுக்கு சென்று எந்தவித மீனும் கிடைக்காமல் வெறுங்கையுடன் வரும் நிலையில் நாங்கள் வாங்கிய கடனை எப்படி செலுத்த முடியும். சிலிண்டர் கொண்டு கணவாய் மீன் பிடிப்பதை அரசு தடை செய்ய வேண்டும் என்றனர்.

பாரம்பரியமாக கணவாய் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள்.

பவளப்பாறைகளுக்கு பாதிப்பு: சிலிண்டர் மூலம் மீன்பிடித் தொழில் செய்பவர்கள் பவளப்பாறையை கம்பரஸர் மூலம் தோண்டுகின்றனர். இயற்கை சீற்றங்களை தடுப்பதில் பவளப்பாறை முக்கிய பங்காற்றுகிறது. அதனையும் இவர்கள் அழித்து வருகின்றனர்.

சிலிண்டர் உதவியுடன் கணவாய் மீன்பிடிப்பதை அரசு இப்போது தடை செய்தால் கூட, எங்களுக்கு மீன்கள் கிடைக்க இன்னும் 2 மாதங்களாகும். அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர். எனவே, பாரம்பரிய மீனவர்களான எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை: இதுகுறித்து மீனவர் வேம்பார் அ.குணசேகரன் கூறும்போது, ‘‘ சிலிண்டர் உதவியுடன் கடலில் இறங்கி கணவாய் மீன்களை பிடிக்கும் மீனவர்கள் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டியிருக்க வேண்டும்.

ஏர் கம்பரஸர் மாட்டிக் கொண்டு கடலில் இறங்கக்கூடாது. ஆனால், இவர்கள் இயந்திரத்தைக் கொண்டு கடலுக்குள் இருக்கும் மணலை தோண்டி சங்குகளை எடுக்கின்றனர். மேலும் இவர்கள் கடலில் விசைப்படகுகளை நிறுத்தி அதிலிருக்கும் சிலிண்டரில் இருந்து குழாய் மூலம் முகக்கவசத்தை மாட்டிக் கொண்டு கடலில் இறங்கி கணவாய் மீன்களை பிடிக்கின்றனர்.

இவர்கள் கடலுக்குள் அங்குமிங்கும் ஓடுவார்கள். அப்போது மிதவையில் அமர்ந்து கணவாய் மீன் பிடிக்க மீனவர்கள் வீசும் தூண்டிலில் அவர்கள் மாட்டியுள்ள குழாய் சிக்கி கொண்டால், அது உடைந்து அந்த நபர் இறக்கும் நிலை ஏற்படும். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

x