இருக்கு... ஆனா இல்லை - காவிரியில் வெள்ளம்... தஞ்சை ஏரி, குளங்களில் வறட்சி!


தஞ்சாவூர்: காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடிய நிலையிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் ஆறுகள் மூலம் பாசனம் செய்யும் பகுதி பழைய டெல்டா பகுதி என அழைக்கப்படுகிறது.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகள் வானம் பார்த்த பூமியாக இருந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1934-ம் ஆண்டு கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டு, பாசன வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால், இந்தப் பகுதிகள் நியூ டெல்டா என அழைக்கப்படுகின்றன.

பழைய டெல்டா பகுதியில் பாயும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள் இறுதியில் வங்க கடலில் கலக்கும். ஆனால், கல்லணைக் கால்வாயில் செல்லும் தண்ணீர் கடலில் கலக்காமல், ஏரி, குளங்கள், குட்டைகளில் சேமிக்கும் வகையில் தொடர் சங்கிலி அமைப்பை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினர். இதனால், இந்த வாய்க்கால் மூலம் 650-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பி, மூன்று போகமும் சாகுபடிக்கு உதவி வந்தது.

நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு: தஞ்சாவூரில் சோழர்கள் காலம் முதல் மராட்டியர்கள் காலம் வரை நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தனர். அதற்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி நீரை சேகரித்து வைத்தனர். குறிப்பாக தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே வெட்டப்பட்ட 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தான் குளம், அழகி குளம் போன்றவை நகரின் குடிநீர் ஆதாரத்துக்கு பிரதானமாக விளங்குகின்றன.

இந்த குளங்களுக்கு முன்பு மழைநீர் சென்று நிரம்பியது. பின்னர் கல்லணைக் கால்வாய் வெட்டியபோது, இந்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில், அதற்கான நீர் வழித் தடங்கள் உருவாக்கப்பட்டன. காவிரி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது, கல்லணைக் கால்வாய் வழியாக தஞ்சாவூர் மாநகரில் உள்ள குளங்களுக்கும் அந்த நீரை நிரப்புவது வழக்கம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மாநகரில் உள்ள குளங்களுக்கான நீர் வழித்தடங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீரை கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம், ஜைனகுளம், கருணாசுவாமி குளம், கிருஷ்ணன் கோயில் குளம் போன்றவை சீரமைக்கப்பட்டன. ஆனாலும், இந்தக் குளங்களில் இதுவரை தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால் மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

அதேபோல, கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்தது. இதனால், 20 கி.மீ. தொலைவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, தஞ்சாவூருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரைச் சுற்றிலும் உள்ள சீனிவாசபுரம் சிங்கபெருமாள் குளம், மானோஜிப்பட்டி குளம் போன்றவற்றுக்கு கல்லணைக் கால்வாய் மூலம் தண்ணீர் வரும் வழி இருந்தும், இதுவரை தண்ணீர் நிரப்பப்படவில்லை.

தஞ்சாவூரில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் சிங்கபெருமாள் குளம்,
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

சிறப்பு திட்டம் தேவை: இதுகுறித்து சமூக ஆர்வலரும், விவசாய செயற்பாட்டாளருமான வெ.ஜீவக்குமார் கூறியதாவது: கல்லணைக் கால்வாய் மூலம் வரும் தண்ணீரை வீணாக்காமல், ஏரி, குளங்களில் சேமிக்கும் வகையில் அந்தக் காலத்தில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 சதவீத ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்லாமல் வறண்ட நிலையிலேயே உள்ளன.

அதேநேரம், காவிரி நீர் உபரியாக கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு கடலில் கலந்தது. நீரை சேமிக்க அதிகாரிகள் முறையாக திட்டமிடாத காரணத்தால் தான், இந்த தண்ணீர் கடலில் கலந்து பயனில்லாமல் போனது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் முன்னுரிமை அடிப்படையில் காவிரி நீரைத் தேக்கி வைக்க ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்ற பின்னர் தான், பிற பகுதிகளில் உள்ள வாய்க்கால், ஏரி, குளங்களுக்கு கொண்டு சென்று நிரப்பப்படும். ஒரு சில இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாலும், நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தடங்கல் உள்ளது. அவற்றை விரைவில் சீரமைத்து நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

x