கடலூர்: கடலூர் மாவட்டத்தையும், புதுச்சேரி மாநிலத்தையும் பிரிக்கும் தென்பெண்ணையாறு பாய்ந்து ஓடி, கடலூர் தாழங்குடா பகுதியில் கடலில் கலக்கிறது. கடலூர் ஆல்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 1891-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக நாள்தோறும் அதிக வாகனங்கள் சென்று வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அதன் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அதன்பிறகு பழைய இரும்பு பாலம் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்தது. இதனால் அந்த பாலம் இடிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடலூர் - புதுச்சேரி சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இப்பகுதியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெண்டர் விடப்பட்டு, அரசின் அனுமதி பெற்று திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே பழைய பாலத்துக்கு மேல் பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்தது. அதன் பிறகு பணிகள் முடிந்து, பாலம் திறக்கப்பட்டு, போக்குவரத்து நடந்து வருகிறது.
தற்போது புதிய பாலம் வழியாக கடலூரில் இருந்து புதுச்சேரி, சென்னை மார்க்கமாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மறுமார்க்கத்தில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
கனரக வாகனங்கள் தொடங்கி இருசக்கர வாகனங்கள் வரையில் அனைத்து வகையான வாகனங்களும் சென்று வருகின்றன. குறிப்பாக இரவில் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன.
புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை அதில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்தப் பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இருளால் பாலத்தின் வழியே நடந்து செல்லும் இப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருளைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடும் நிலையும் உள்ளது. பாலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன், மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொது மக்கள் எதிர்பார்க் கின்றனர்.