பழுதடைந்த நெடுஞ்சாலை, ரோந்து வாகனங்கள்... - பரிதவிக்கும் கடலூர் காவல் துறையினர்!


கடலூர் - சேலம் நெடுஞ்சாலையில் பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் இயங்கும் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களோடு காவல்துறையினர் மல்லுக்கட்டி வருகின்றனர். போக்குவரத்து காவல்துறை சார்பில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

சாலைகளில் நிகழும் விபத்து விசாரணை, விபத்துக்கான ஆதாரங்களை சேகரித்தல், எடை வரம்புகள் மற்றும் அபாயகரமான பொருட்கள் ஏற்றிச் செல்வதைக் கண்காணித்து அபராதம் விதித்தல், போக்குவரத்து தொடர்பான நெடுஞ்சாலைச் சட்டங்களை அமல்படுத்துதல், கல்வி நிலையங்களின் வாகனங்கள் பாதுகாப்பாக இயங்குவதை கண்காணித்தல், சாலைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க பொது தகவல், கையேடுகள் மற்றும் காட்சிகளை வழங்குதல்.

விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்குதல், கிராமப்புறங்களில் உள்ளூர் போலீஸாருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள போக்குவரத்துக் காவல் துறையின் கீழ் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் அளிக்கப்பட்டு, இயக்கப்படுகின்றன.

இதற்காக வழங்கப்பட்ட வாகனங்கள், போக்குவரத்து காவல் துறையினரால் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் சில துருப்பிடித்து மக்கி, கதவுகள் சரிவர மூடப்பட முடியாமல் கட்டுக் கம்பிகளைக் கொண்டு கட்டி இயக்கப்படும் நிலையில் உள்ளது. சில வாகனங்களுக்கு ஆயுள் காலமே முடிந்தும், தகுதிச்சான்று இல்லாமல் இயங்கி வருகின்றன.

எப்போது எங்கு வேண்டுமானாலும் இந்த ரோந்து வாகனம் பாதி வழியில் பழுதாகி நிற்கும் நிலையில் உள்ளது என்று கடலூர் - சேலம் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பழைய ரோந்து வாகனங்களுக்கு பதிலாக கடந்த 2022-ம் ஆண்டு அதிநவீன வசதிகள் கொண்ட வாகனங்களை வழங்கினர். அப்போது கூட எங்களைக் கருத்தில் கொள்ளாமல் பழைய வாகனங்களையே இயக்கும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என்று இந்த காவலர்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.

ஆயள் காலம் முடிந்து பழுதான நிலையில் உள்ள வாகனங்களைக் கொண்டு, போக்குவரத்து தொடர்பான நெடுஞ்சாலை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை இவர்களை நிர்பந்திப்பது முரணாகப்படுகிறது.

நடைமுறையில் உள்ள சிக்கல்களை புரிந்து கொண்டு, காலத்திற்கேற்ற வகையில் அதி நவீன வாகனங்களையும் பராமரிப்பிற்கான முழுச் செலவையும் அரசு வழங்கினால் தான் ரோந்து வாகனங்களை அதற்கான பணிக்காக திறம்பட செயல்படுத்த முடியும் என்கின்றனர் இதை இயக்கும் காவலர்கள்.

போக்குவரத்து காவல்துறை கண்டு கொள்ளுமா?

x