கேஸ் சிலிண்டர் தீரப்போவதை முன்பே தெரிவிக்கும் கருவி - மதுரை ஆசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு


மதுரை: சமையல் எரிவாயு சிலிண்டர் தீருவதை அலாரம் மூலம் அறிவிக்கும் புதிய கருவி ஒன்றை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் எம்.அப்துல் ரசாக் கண்டுபிடித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே ரைஸ் குக்கர் (தேசிய விருது), இருபுறமும் இயங்கும் மின் விசிறி, ராணுவ பணிக்கான ஆடை, தண்டவாள விரிசல் கண்டறிதல் கருவி, நடமாடும் சீலிங் பேன், ஆள்துளை கிணற்றில் தண்ணீர் அளவு கண்டறியும் இயந்திரம், மாற்றுத் திறனாளிக்கான கழிப்பறை, எண்ணெய் பிரித்தெடுக்கும் கருவி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.

இருப்பினும் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி தொடர்ந்து சிறு, சிறு புதிய கருவிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார். இவரது முயற்சியை அடையாளம் கண்ட மதுரை தனியார் பள்ளி ஒன்று அவருக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வாய்ப்பை வழங்கியுள்ளது.

புதிய கண்டுபிடிப்பு குறித்து அப்துல் ரசாக் கூறியதாவது: சிறுவயதில் இருந்தே கிடைக்கும் பொருட் களை வைத்து புதிய கண்டுபிடிப்பில் இறங் கினேன். அந்த வரிசையில் தற்போது, சிலிண்டரிலுள்ள எரிவாயு காலியாவதை முன்கூட்டியே கண்டறியும் கருவி ஒன்றை கண்டறிந்துள்ளேன். வட்ட வடிவில் ஒரு அடி அகலம் கொண்ட இக்கருவியின் கீழ் பகுதியில் 4 வீல், சிறிய பேட்டரி, ரிலீப் சுவிட்ச், சிகப்பு நிற பல்ப், அலாரம் தரும் ஒலிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன.

புதிய கருவியுடன் கண்டுபிடிப்பாளர்
அப்துல் ரசாக்

ரூ.1,000-க்குள் இதனை தயாரித்திடலாம். இக்கருவியின் மேல் சிலிண்டரை நிறுத்த வேண்டும். சிலிண்டரிலிலுள்ள எரிவாயு தீர்ந்தவுடன் சிவப்பு நிற லைட் எரிந்த நிலையில் விசில் அலாரம் கேட்கும். இதன்மூலம் சிலிண்டர் காலியாகி விட்டதை தெரிந்து கொள்ளலாம். இதனை 10 நாட்களுக்கு முன்பே அறியும் வகையில் செட் செய்தால், காலியாவதற்கு முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

சமையலறை பெண்களுக்கு இக்கருவி மிக பயனுள்ளதாக இருக்கும். இக்கண்டு பிடிப்பில் நான் பணிபுரியும் சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் யோசனைகளும் இடம் பெற்றுள்ளன. முழுக்க, பேட்டரி மூலமே செயல்படுவதால் விபத்து ஆபத்தில்லை.

ஏற்கெனவே நான் கண்டுபிடித்துள்ள ரைஸ் குக்கர், இறபுறமும் இயங்கும் மின்விசிறி, பஞ்சர் ஆகாத டயர், மாற்றுத் திறனாளி கழிப்பறை, தண்டவாள விரிசல் உள்ளிட்ட சில கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கியுள்ளேன். யாரேனும் உதவ முன்வந்தால் எனது கண்டுபிடிப்புகளை உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்று கூறினார்.

x