நிதி ஒதுக்கி ஒன்றரை ஆண்டுகளாச்சு... திண்டுக்கல் புதிய பேருந்து நிலையப் பணி தொடங்குவது எப்போது?


திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தற்போதைய பேருந்து நிலையம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி ஒன்றரை ஆண்டுகள் ஆன போதிலும், மாநகராட்சி எல்லைக்குள் இடம் இல்லாததால் புதிய பேருந்து நிலையம் அமைவது என்பது கண்ணுக்கு எட்டியும், கைக்கு எட்டாத கானல் நீராகவே உள்ளது.

திண்டுக்கல் நகரின் மத்தியில் ஐந்தரை ஏக்கர் பரப்பில் பேருந்து நிலையம் உள்ளது. இது பேருந்துகள் நின்று செல்ல போதுமான இடம்தான் என்றாலும், குறுகிய சாலைகள், அதிக வளைவுகள், வேகத்தடைகள் என பல தடைகளைத் தாண்டி பேருந்து நிலையத்துக்குப் பேருந்துகள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க, திண்டுக்கல் நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

இதற்குத் தீர்வுகாணும் வகையில், 2023-2024 பட்ஜெட்டில் திருச்சி, திண்டுக்கல், நாகர்கோவில் மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் ரூ.174 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவிக்கப் பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கு, மாநகராட்சி எல்லைக்குள் புதிய பேருந்து நிலையம் கட்டும் அளவுக்கு இடம் இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. திண்டுக்கல் மாநகராட்சியுடன் அறிவிக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்துக்கான பணி கள் உடனடியாக தொடங்கப்பட்டுப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

திண்டுக்கல் புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடம்.

விரிவாக்கம் இல்லாததால் சிக்கல்: திண்டுக்கல், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எல்லை விரிவாக்கம் செய்யப் படாததால், தற்போதுள்ள மாநகராட்சி எல்லைக்குள் புதிய பேருந்து நிலையம் அமைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது.

நிதி ஒதுக்கி ஓராண்டுக்கு மேலான நிலையில், பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நிலைக்கு மாநகராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் அவசரமாக மாநகராட்சி கூட்டத்தில் ‘முக்கிய இடத்தில் அமைய வுள்ள’ பேருந்து நிலையம் என (இடத்தைக் குறிப்பிடாமல்) குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றி, பேருந்து நிலைய மாதிரி வடிவமைப்புக்கு ஒப்புதல் கோரப் பட்டுள்ளது.

ஊராட்சி எல்லைக்குள்: மாநகராட்சி நிர்வாகம் தற்போது குறிப்பிட்டுள்ள இடம் மாநகராட்சிக்கு வெளியே பள்ளபட்டி கிராம ஊராட்சிக்குச் சொந்தமான பகுதி என்பதால், இதில் உடனடியாக பேருந்து நிலையம் கட்டும் பணியைத் தொடங்க முடியாது

. திண்டுக்கல் மாநகராட்சியுடன், ஏற் கெனவே பரிசீலனையில் உள்ள பள்ள பட்டி உள்ளிட்ட திண்டுக்கல்லை சுற்றியுள்ள 10 கிராம ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும்.

இதற்கு, 10 ஊராட்சித் தலைவர்களின் பதவிக் காலம் முடிவடைய வேண்டும். வரும் டிசம்பரில்தான் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதன்பிறகே ஊராட்சிகளை இணைக்கும் நடை முறைகளை மேற்கொள்ள முடியும்.

ஊராட்சிகளை இணைத்த பிறகே, திண்டுக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பணிகளை தொடங்க முடியும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் பேருந்து நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பணிகளைத் தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, திண்டுக் கல்லில் இடத்தை தேர்வு செய்து புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகிவிடும் என்பதே நிதர்சனம்.

x