கிராமிய அபிவிருத்தி இயக்க உதவியுடன் விளைநிலங்களாக மாறிய தரிசு நிலங்கள் @ நீலகிரி


பொக்காபுரம் அருகே குரும்பர்பாடி பகுதியில் பல பயிர்களை விளைவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பழங்குடியினர்.

உதகை: நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பழங்குடியின கிராமங்கள் குரும்பர்பாடி, குரும்பர் பள்ளம், தக்கல், கோவில்பட்டி, தொட்டலிங்கி. இங்கு குரும்பர், பெட்டகுரும்பர் மற்றும் இருளரின பழங்குடியினர் வசிக்கின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பழங்குடியினரின் வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே. கால்நடை வளர்ப்பில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் வாழும் பகுதி வானம் பார்த்த பூமி. தண்ணீர் வசதி இல்லாததாலும், போதுமான மழைப் பொழிவில்லாததாலும், கடும் போராட்டத்தில் விவசாயத்தை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டாண்டுகளாக வறட்சி நிலவியதால், விவசாயம் பொய்த்துப்போனது. கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. இதனால், விரக்தியில் இருந்த பழங்குடியினருக்கு உதவியாக வந்தது அருவங்காட்டில் செயல்பட்டு வரும் கிராமிய அபிவிருத்தி இயக்கம்.

சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட குரும்பர்பாடி, குரும்பர்பள்ளம், தக்கல், கோவில்பட்டி, தொட்டலிங்கி ஆகிய கிராமங்களில் 67 ஏக்கர் தரிசு நிலங்களை பல்வேறு பயிர்கள் விளையும் நிலமாக மாற்றியுள்ளனர். இது முற்றிலுமாக இயற்கை வேளாண்மை என்பது கூடுதல் சிறப்பு. இதற்கான ஆலோசனைகள், விதைகள், இடுபொருட்களை விவசாயிகளுக்கு கிராமிய அபிவிருத்தி இயக்கம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து குரும்பர்பாடி கிராம தலைவர் கிருஷ்ணன் கூறும்போது, "எங்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மட்டுமே வாழ்வாதாரம். விவசாயம் செய்யவும் போதிய வசதி இல்லை. நிலங்களை உழ டிராக்டர் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1700 வரை செலவாகும். இந்த வாடகையை கொடுக்க எங்களிடம் பணம் இல்லை.

இதுபோக விதை, இடு பொருட்கள் என விவசாயம் செய்யவே பல ஆயிரம் ரூபாய் தேவை. மேலும், வறட்சி ஏற்பட்டபோது விவசாயம் செய்ய முடியாத நிலையில், பழங்குடியினர் கூலி வேலை, தனியார் தங்கும் விடுதிகளில் பணிக்கு சென்றனர்.

தற்போது பொக்காபுரம், மசினகுடி பகுதிகளிலுள்ள தனியார் விடுதிகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்ட நிலையில், அந்த வேலையும் பறிபோனது. இதனால், விவசாயத்துக்கு பலர் திரும்பிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்தாண்டு நல்ல மழை பெய்தது. கிராமிய அபிவிருத்தி இயக்க தன்னார்வலர்கள் இங்குள்ள 67 ஏக்கர் நிலங்களை உழுது கொடுத்தனர்.

பின்னர், விதைகள் வழங்கி சாகுபடிக்கு உதவினர். முழுக்க முழுக்க தற்போது இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறோம். பயிர் விளைந்ததும் அறுவடைக்கு பின்னர் சந்தைப்படுத்தவும் உதவ உறுதியளித்துள்ளனர்" என்றார்.

இந்த கிராமங்களில் கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் ஆலம்மா என்ற இருளரின பெண் பணிபுரிந்து வருகிறார். இவருடன் கிராமிய அபிவிருந்தி இயக்கத்தின் தன்னார்வலர்கள் சுப்ரமணி, மனிஷா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "இப்பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு நிலங்களை உழ வேளாண் பொறியியல் துறை மூலமாக மானிய விலையில் உழுது கொடுத்தோம். தற்போது, டிராக்டர் வாங்க இந்த ஊர்களின் தலைவர் பெயரில் விண்ணபித்துள்ளோம்.

இந்த டிராக்டர் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். தேவைப்படுபவர்களுக்கு ஒரு வாடகையை நிர்ணயித்து வாடகைக்கு வழங்கலாம். அந்த தொகையை வைத்து அவர்கள் டிராக்டரை பராமரித்துக் கொள்ள வேண்டும். நிலங்களை உழுது கொடுத்த பின்னர், விவசாயிகளுக்கு ராகி, தக்காளி, எள்ளு, தட்டைபயிறு, கடுகு, பூசணி, பாசிப் பயிறு விதைகள் வழங்கியுள்ளோம்.

மேலும், பயிர்களை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க பஞ்சகாவ்யா, தசகாவ்யா, மீனமிலம் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இவற்றை உற்பத்தி செய்ய பயிற்சி அளித்து வருகிறோம். அவர்களே இதை உற்பத்தி செய்து பயன்படுத்துகின்றனர்.

இதனால், முழுவதுமாக இயற்கை வேளாண்மையில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, 67 ஏக்கர் நிலத்தில் பல பயிர்களை பயிரிட்டுள்ளனர். ராகி 100 நாட்களில் விளைந்துவிடும். விளைபொருட்களை சந்தைப்படுத்தவும் உதவ உறுதியளித்துள்ளோம்" என்றனர்.

இப்பகுதிகள் மழையை நம்பியுள்ள நிலையில், மழை பொய்த்துவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலையுள்ளது. இந்நிலையில், இங்கு தண்ணீர் வசதிக்காக சோலூர் பேரூராட்சி மூலமாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாததால் ஆழ்துளை கிணறு பயனற்றுவிட்டது.

இந்நிலையில், கிராமிய அபிவிருத்தி இயக்கம் மூலமாக, ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் இரைக்க ரூ.24 ஆயிரம் மதிப்பில் மோட்டார் வாங்கப்பட்டுள்ளது. சோலூர் பேரூராட்சி நிர்வாகம் விரைவில் ஆழ்துளை கிணற்றை சீரமைத்தவுடன் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x