கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்


ரோபோ அறுவை சிகிச்சை

ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில், அந்த எந்திரனின் தவறான செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமெரிக்காவில் பரிதாபமாக இறந்திருக்கிறார்.

எங்கே திரும்பினாலும் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, சகலமும் தானியங்கி மயம் என்பதாகவே உலகம் மாறி வருகிறது. மனிதர்களின் வேலையிழப்புக்கு காரணமாகும் ரோபோக்களின் மறுபக்கம் கொடூரமானது. தனக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு அப்பால் இம்மியும் பிசகாத இந்த எந்திரன்கள், மனிதர்களின் பணி மட்டுமன்றி உயிரைப் பறிக்கவும் ஆரம்பித்திருக்கின்றன.

ரோபோ அறுவை சிகிச்சை

எந்திரன்களின் அனுகூலங்கள் மருத்துவத்துறையிலும் அதிகரித்துள்ளன. மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு வாய்த்திராத துல்லியம், ஓர்மை ஆகியவற்றுடன், ஓய்வின்றி அறுவை சிகிச்சைகளை நடத்தி முடிப்பதில் எந்திரன்கள் அலாதியானவை. மேலும் ரிமோட் சிஸ்டம் அடிப்படையில் தொலைவில் இருந்து இந்த எந்திரனை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழி நடத்துவது எளிது.

இப்படி நேர்மறை சாதகங்களை கொண்டிருந்தபோதும் இந்த எந்திரன்கள், மனித நுணுக்கம் மற்றும் ஆய்ந்தறியும் அறிவு இல்லாததன் காரணமாக விபரீதத்துக்கு வழி செய்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார்.

அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது. பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது. ஆனால் அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார்.

ரோபோ அறுவை சிகிச்சை

புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ராவை, முந்திக்கொண்டு சாகடித்திருக்கிறது ’டா வின்சி’ ரோபோவின் தவறான அறுவை சிகிச்சை. ஹார்வி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கில், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார். மேலும் டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவை சிகிச்சைகளால் நிகழ்ந்த சாவுகள் தொடர்பான விசாரணையும் கோரியிக்கிறார்.

x