விருப்பம்போல சாப்பிடலாம், தூங்கலாம்... வேலையும் பார்க்கலாம்; ஹைதராபாத்தில் கலக்கும் மைக்ரோசாப்ட் அலுவலகம்


‘மைக்ரோசாப்ட் இந்தியா’ ஹைதராபாத் அலுவலகம்

வாழ்ந்தால் இப்படியொரு வாழ்க்கை, வேலை பார்த்தால் இப்படியான வளாகத்தில் வேலை என பட்டதாரிகளை ஏங்கடிக்கச் செய்து வருகிறது, ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அலுவலக வளாகம்.

வாழ்க்கை - பணி இடையிலான அகழியை கூடுமானவரை நிரவுதல் மூலம், பணியாளர்களின் ஆகச் சிறந்த திறனை கறப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன. இருக்கையை தேய்க்கும் சோம்பலான அலுவலகச் சூழல் மற்றும் அது தரும் அழுத்தங்களை தவிர்ப்பதன் மூலம், மேற்படி பணியாளர் திறனை கறப்பதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வித்தியாசம் காட்டுகின்றன.

மைக்ரோசாப்ட்

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய அலுவலகம், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இங்கு தனிப்பட்ட வாழ்க்கைக்கும் - பணிக்கும் இடையிலான கோட்டினை, ஆகமுடிந்த வரை அழித்திருக்கிறார்கள். அதற்காக ஊழியர்கள் நலம் நாடும் வசதிகளையும் செய்து தந்திருக்கிறார்கள்.

எதையாவது கொறித்தபடியே வேலை பார்ப்பது ஒருவருக்கு பிடித்தமானது எனில், இலவசமாக கிடைக்கும் நொறுக்குத் தீனிகளை இஷ்டம் போல உள்ளே தள்ளிபடி பணியைத் தொடரலாம். இதற்கு அப்பால் சாப்பாட்டு நேரத்துக்கான வசதிக்கு என 24 மணி நேரமும் இயங்கும் உணவகம் ஒன்று அலுவலக வளாகத்திலேயே இயங்குகிறது.

சதா பணியுடன் போராடுவதற்கு அப்பால் போரடிக்கிறது என்பவர்கள், அலுவலகத்திலேயே இருக்கும் ஹோம் தியேட்டரில் விரும்பியபடி படம் பார்க்கலாம். அருகில் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் நுழைந்து சற்று நேரம் உடலுக்கு வலு ஏற்றலாம். எதுவும் வேண்டாம், சற்று நேரம் குட்டித்தூக்கம் வேண்டியிருக்கிறது என்பவர்களுக்கும் அலுவலகத்திலேயே இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

’பவர் நாப்’ எனப்படும் பணியிடையே குட்டித்தூக்கம் போடுவதால், ஊழியர்களின் பணித்திறன் அதிகரிக்கும் என்ற ஆய்வு முடிவையொட்டி, அதற்கான ஆச்சரிய ஏற்பாட்டையும் செய்துவைத்திருக்கிறார்கள். இவை மட்டுமன்றி, பார்மஸி, 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி, வீடு சென்று திரும்ப வைஃபை வசதியுடனான ஏசி பேருந்து என்றெல்லாம் வகைதொகையாக ஜமாய்த்திருக்கிறார்கள்.

இவை அத்தனையும் ஊழியர்களின் பணித்திறனை முழுமையாக வெளிக்கொணர்வதற்கான ஏற்பாடு என்பதால், பணித்திறனில் சரிவு காண்போர் உடனடியாக வேலையிலிருந்து துரத்தப்படுவார்கள் என்பதை தனியாக குறிப்பிடத்தேவையில்லை. ஆனபோதும் படிப்பை முடித்து வேலை தேடுவோர் மற்றும் கல்லூரியில் படிப்போர் மத்தியில் மைக்ரோசாப்ட் இந்தியாவின் ஹைதராபாத் அலுவலகம் கவர்ந்திழுத்து வருகிறது.

அதற்கேற்ப ஹைதராபாத்தில் அமைந்திருக்க்கும் மைக்ரோசாப்ட் இந்தியா அலுவலக வளாகம் தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியும் வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை...மதுரை சுங்கச்சாவடி அருகே பயங்கரம்!

x