சென்னைக்கு இணையாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம் - என்ன ஸ்பெஷல்?


தூத்துக்குடி: சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இணையாக ஓடுதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தூத்துக்குடி விமான நிலையம் தயாராகி வருவது, தொழில் துறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, துாத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கூடுதல் விமானங்களை கையாளும் வகையில் ரூ.227.33 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 17,341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்டிடங்கள், தீயணைப்பு துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு செல்லும் வகையில், 1 கி.மீ.,க்கு இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடைபெறுகிறது. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும், 21 பயணியர் 'செக் இன் கவுன்டர்'களும், மூன்று 'ஏரோ பிரிட்ஜ்'களும், இரண்டு வருகைக்கான, 'கன்வேயர் பெல்ட்'களும் அமைக்கப்படுகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், இரண்டு விஐபி அறைகள், 'லிப்ட்' வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில், ஒரு மணி நேரத்துக்கு, 1,440 பயணிகளை கையாளும் வகையிலான வசதிகள் என, அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டிடங்கள் முழுதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய முனையத்தில் ரூ.113.63 கோடி மதிப்பீட்டில், 3,115 மீட்டர் நீளத்துக்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை
கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.‌ மேலும் விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விமான நிலைய இயக்குநர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொழில் துறையில் தூத்துக்குடி மாநகரம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அரசு துறைகள், தனியார் துறைகள் சார்பில் பல்வேறு தொழிற்சாலைகள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல்வேறு தொழில் திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தங்கள் தயாராகின்றன. இத்தகைய சூழலில், அளவில் மிகச் சிறியதாக இருந்த தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தொழில் துறையின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இதற்கேற்ப, சென்னை விமான நிலையத்துக்கு இணையாக தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு பணிகள் தொடங்கி நடந்து வருவது, இப்பகுதியில் உள்ள தொழில் துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

x