பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் 200 தொழிற்கூடங்கள்!


பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பயன்பாடு இல்லாமல் பூட்டிக்கிடக்கும் தொழிற்கூடங்கள்.

ஈரோடு: பெருந்துறை சிப்காட் வளாகத்தில், கடந்த 25 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியவேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம், கடப்பமடை, ஈங்கூர், காசிபில்லாம்பாளையம், எழுதிங்கள்பட்டி, ஆலாங்காட்டூர், கூத்தம்பாளையம், செங்குளம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் இருந்து 2,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு முறைப்படி தொடக்கவிழா நடந்த பெருந்துறை சிப்காட் வளாகத்தில், ஜவுளி பதனிடும் ஆலைகள், ரெடிமேடு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நூல் மில்கள், ஜவுளி மில்கள், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், சிப்காட் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

தாட்கோவுக்கு நிலம் ஒதுக்கீடு: பெருந்துறை சிப்காட் நிறுவனம் தொடங்கும்போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக 150 ஏக்கர் நிலம் தாட்கோ மூலம் ஒதுக்கப்பட்டன. இந்த நிலத்தில், பல கோடி ரூபாய் செலவில், 200-க்கும் மேற்பட்ட சிறு,குறு தொழிற்கூடங்கள் (ஷெட்), மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்தத் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், யாருக்கும் பயன் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக
பயன்பாடு இல்லாமல் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி.

இதுகுறித்து ஏஐடியுசி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி கூறியதாவது: பெருந்துறை சிப்காட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் தாட்கோ மூலமாக 100 ஏக்கர் பரப்பளவில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பின்னலாடை தொழில் தொடங்கும் வகையில் இந்த கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், எஸ்.சி- எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் சிப்காட் வளாகத்தில் தொழில் நிறுவனங்களை அமைக்கும் சூழல் இல்லாததால், 200-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் யாருக்கும் பயனின்றி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கின்றன.

பயன்பாடு இல்லாமல் இருப்பதால், இந்த தொழிற்கூடங்களின் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, சுவர்களும் விரிசல் விட்டு பராமரிப்பின்றி கிடக்கின்றன. இப்பகுதியில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியும் பயனின்றி கிடக்கிறது. பூட்டப்பட்ட தொழிற்கூடங்களில் சமூகவிரோத செயல்களும் நடந்து வருகின்றன.

இந்த தொழிற்கூடங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களை தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை செய்ய வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் மூலமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெருந்துறை சிப்காட் முகப்பு வளாகம்

நீதிமன்ற வழக்கு: இதுகுறித்து பெருந்துறை சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது: நிலங்களை கையகப்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது மட்டுமே சிப்காட் நிறுவனத்தின் பணி ஆகும். அவ்வாறு விற்பனை செய்யும் நிலங்களை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால், அந்த நிலத்தை மீண்டும் சிப்காட் நிறுவனமே திரும்ப பெற்றுக் கொள்ளும்.

அந்த வகையில் தாட்கோவுக்கு வழங்கப்பட்ட 150 ஏக்கர் நிலத்தில், 48 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனம் திரும்ப பெற்றுக் கொண்டு, 3 நிறுவனங்களுக்கு தொழிற்சாலை தொடங்குவதற்காக வழங்கியுள்ளோம். மீதமுள்ள நிலங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இவவாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொழில்துறையில் சாதனைகளை மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை ஒருபுறம் முன்னெடுத்து வருகிறது. மறுபுறம், கோடிக்கணக்கில் செலவு செய்து, பயன்பாடு இல்லாமல் 25 ஆண்டுகளாக தொழிற்கூடங்கள் உள்ளன. இவற்றின் மீது அரசின் பார்வை திரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பு தொடர்கிறது.

x