உடுமலை: திருமூர்த்தி மலைப் பகுதியை சுற்றுலா வளர்ச்சித் துறை மூலம் மேம்படுத்த எந்த திட்டப் பணிகளும் நிறைவேற்றப்படவில்லை என சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. அடிவாரத்தில் உள்ள பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கடவுள் வழிபாடுடன் கூடிய அமணலிங்கேஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. அங்கு தினமும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
பக்தர்கள் இளைப்பாறி செல்ல கல் மண்டபம், திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கான மண்டபம் ஆகியவை உள்ளன. அடிவாரத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ., உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அருவியை ஒட்டியே மேல் பகுதியில் 5 லிங்கங்கள் அமையப்பெற்று, அங்கு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. வழுக்கும் பாறைகளுக்கு நடுவே மிகவும் ஆபத்தான பகுதியில் லிங்க வழிபாடு மேற்கொள்ள வேண்டும். விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அருவிக்கு முன்னதாக பெண்களுக்கென உடை மாற்றும் அறை அமைந்துள்ளது.
திருமூர்த்தி மலைப் பகுதியை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மேம்படுத்த கடந்த காலகட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு படகு சவாரி, நீர்ச்சறுக்கு விளையாட்டுகள், தீம் பார்க், தங்கும் விடுதி, பேருந்து நிலையம், பார்க்கிங் வசதி, நவீன கழிவறை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சுற்றுலா துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளன. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் திருமூர்த்திமலைக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் இதுபோன்ற இயற்கை தலங்களில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்திமலையில் எந்த வளர்ச்சித்திட்டப்பணிகளும் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது. இது குறித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.