அகழி இப்போ குப்பை மேடாச்சு... நீர் பரப்பி தஞ்சை பெரிய கோயிலுக்கு மீண்டும் அழகு சேர்ப்பது எப்போது?


தஞ்சாவூர் பெரிய கோயிலின் முன்புறம் உள்ள நீர் நிரம்பி உள்ள அகழி. (கோப்பு படம்)

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் முன்பாக உள்ள அகழியில், கோயிலின் அழகை கெடுக்கும் வகையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அகழியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைச் சுற்றிலும், கோயிலுக்கு வெளியே அரண்மனையைச் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த அகழி 4 கிலோ மீட்டர் தொலைவும், 20 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை அகலமும், 4 மீட்டர் முதல் 10 மீட்டர் ஆழமும் கொண்டது.

பெரிய கோயிலையும், அரண்மனையையும் பாதுகாக்கும் வகையில் வெட்டப்பட்ட இந்த அகழியில் எப்போதும் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கல்லணைக் கால்வாயை வெட்டி, பெரிய கோயிலின் தென்பகுதியில் உள்ள அகழி வழியாக தஞ்சாவூர் நகருக்குள் உள்ள சிறிய மற்றும் பெரிய அகழிக்கு தண்ணீர் செல்லும் வகையில் நீர் வழித்தடத்தை உருவாக்கினர்.

பின்னர் காலப்போக்கில் அரண்மனையை சுற்றி வெட்டப்பட்ட அகழியில், தற்போது கீழவாசல் முதல் ராஜராஜசோழன் சிலை வரை இருந்த அகழி தூர்க்கப்பட்டு, அதில் பழைய பேருந்து நிலையம், மாவட்ட மைய நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 1 கிலோ மீட்டர் தூரம் அகழியின் தடங்கள் ஏதும் இல்லை.

அதேபோல, பெரிய கோயிலின் முன்பகுதியில் அகழியில் முன்பெல்லாம் தண்ணீர் நிரபப்பபட்டு, கோயிலும், கோட்டைச் சுவரும், கொத்தளமும் அழகாக காணப்படும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த அகழிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் குப்பை மேடாகவும், செடி கொடிகள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்தும் கோயிலின் அழகை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறன் கூறியது: பெரிய கோயிலின் தென்புறம் உள்ள அகழி வழியாகத்தான் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1928 முதல் 1934 வரை கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயிலின் முன்புறம் உள்ள அகழியில்
வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள். படம்: ஆர்.வெங்கடேஷ்

இதன் மூலம் தஞ்சாவூருக்கு எப்போதும் தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் அதற்கான திட்டமிடலை செய்துள்ளனர். தற்போது கோயிலின் முன்புறம் உள்ள அகழி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய அழகை இழந்து குப்பை மேடாகவும், புதர்கள் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும் உள்ளது வேதனை அளிக்கிறது. மீண்டும் இந்த அகழிக்கு தண்ணீர் வரும் பாதையை கண்டறிந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தஞ்சாவூர் பெரிய கோயில் முன் பகுதியில் உள்ள அகழி தஞ்சாவூர் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. அந்த இடத்தை எங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டோம். மாநகராட்சி நிர்வாகமும் ஒப்படைப்பதாக மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது.

அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமானால், அதற்கு பணம் செலுத்த வேண்டும். இதனால் தான், எங்களிடம் இன்னும் அதை ஒப்படைக்கவில்லை. தொல்லியல் துறை வசம் ஒப்படைத்தால் மீண்டும் அகழியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

x