காஞ்சிபுரம்: மூடுகால்வாயாக அமைக்கப்படும் மஞ்சள்நீர் கால்வாய்!


காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர் கால்வாயை மூடு கால்வாயாக மாற்றுவதற்காக தொடங்கப்பட்டுள்ள கட்டுமான பணிகள்.

காஞ்சிபுரம் நகரத்தின் நடுவே அமைந்துள்ள மஞ்சள் நீர் கால்வாய், நகரப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாயாக விளங்கி வருகிறது. ஒக்கப்பிறந்தான் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், நகரத்தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, நத்தப்பேட்டை ஏரியை சென்றடையும் வகையில் மன்னர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஒக்கப்பிறந்தான் குளத்தில் உருவான ஆக்கிரமிப்புகள் காரணமாக, இந்தக் கால்வாயில் நீர்வரத்து இல்லாமல் போனது. மேலும், கால்வாயில், சாயப்பட்டறைகளின் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இக்கால்வாயில், நகரப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீர் வெளியேறி நத்தப்பேட்டை ஏரியை சென்றடைகிறது. இதில், கழிவுநீருடன் சேர்ந்த டன் கணக்கிலானபிளாஸ்டிக் கழிவுகள் நாள்தோறும் ஏரியில் கலந்து வருகிறது.

இதனால், ஏரியின் தண்ணீர் முற்றிலும் மாசமடைந்துள்ளது. மேலும், ஏரியில் மலைபோல் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீருடன் கலந்து பாசன கால்வாய் வழியாக விளை நிலங்களில் உட்புகும் நிலை உள்ளது. இதனால், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் மலட்டு நிலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏரியின் உபரிநீர் சென்றடையும் வையாவூர், களியனூர், தென்னேரி உட்பட 17 ஏரிகள் மாசடைந்து வருகிறது. அதனால், மஞ்சள்நீர் கால்வாயை சீரமைத்து பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுத்து, மேற்கண்ட ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மஞ்சள்நீர் கால்வாயை சீரமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் ரூ.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், 6 கி.மீ., நீளம் கொண்ட மஞ்சள்நீர் கால்வாயை மூடுகால்வாயாக மாற்றி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதால், நகரப்பகுதியில் சுற்றுச் சூழல் மாசு குறைவதற்கும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியில் கலப்பதை தடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜ்கமல்

இதுகுறித்து, வழக்கறிஞர் ராஜ்கமல் கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு நகரப்பகுதியில் கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது, வெள்ளநீர் மஞ்சள்நீர் கால்வாய் மூலம் நத்தப்பேட்டை ஏரியை சென்றடைந்ததால், வெள்ள பாதிப்புகள் பெருமளவு குறைந்தது. அதேநேரத்தில், குடிநீருக்கு பயன்பட்டு வந்த நத்தப்பேட்டை ஏரியில் மஞ்சள்நீர் கால்வாய் மூலம் கழிவுநீரை வெளியேற்றியதால் மாசடைந்து, பாசன பயன்பாட்டுக்கு கூட உகந்ததல்ல என்ற நிலைக்கு ஏரி தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஞ்சள்நீர் கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் குடியிருப்பு கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் மூடுகால்வாயாக மாற்றுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், கால்வாயின் அகலத்தை குறைக்கும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், கால்வாயின் மீது இலகுரக வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், மாநகராட்சி நிர்வாகம் மூடுகால்வாய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், நகரை மழை வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றும் வகையில் மஞ்சள்நீர் கால்வாயின் கட்டுமான பணிகளை முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் கூறியதாவது: மஞ்சள் நீர் கால்வாயின் இருபுறங்களிலும் ஏற்கெனவே உள்ள தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.மேலும், கால்வாயின்அருகேயுள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் கலப்பதை தடுப்பதற்காக, மஞ்சள்நீர்கால்வாயை மூடுகால்வாயாக அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுமார் 6 கி.மீ., நீளம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் மூடுகால்வாய் அமைக்கப்பட உள்ளது.

மேலும், கால்வாயின் மீது வாகன போக்குவரத்து நடைபெற உள்ளதாக கூறப்படுவது உண்மையல்ல. மூடு கால்வாயாக அமைப்பதன் மூலம் கால்வாயை ஒட்டியுள்ள சாலைகளை அகலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார்.

x