கோவை மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் ‘சென்சார்’ மூலம் குடிநீர் விநியோக திட்டம்!


ரன் நகரில் ‘சென்சார்’ தொழில்நுட்ப அடிப்படையில் குடிநீர் விநியோகிக்கும் பணியை பார்வையிட்ட மத்திய அரசு செயலர் தாரா, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாக ரன் உள்ளிட்டோர்.

கோவை: கோவை மாநகராட்சியின் 17-வதுவார்டில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை வார்டு முழுவதும்விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள், வடவள்ளி - கவுண்டம்பாளையம், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தினமும் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

குடிநீர் விநியோக இடைவெளி நாட்கள் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப மாறுபடுகிறது. இச்சூழலில், தனியார் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் துறையினரால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகராட்சியின் 17-வது வார்டில் 15-க்கும் மேற்பட்ட வீதிகளில் உள்ள 400 வீடுகளுக்கு, தினமும் குறிப்பிட்ட அளவு குடிநீரை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன்கூறும்போது, ‘‘17-வது வார்டுக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இங்குள்ள வீடுகளுக்கு 1,800 குடிநீர் இணைப்புகள் உள்ளன.

முதல்கட்டமாக 400 வீடுகளுக்கு, சென்சார் மூலம் இயங்கும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒருவருக்கு ஒருநாளைக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். அந்த அளவீட்டின்படி, வீடுகளின் உறுப்பினர்களை கணக்கிட்டு, தினசரி தேவையான அளவு தண்ணீர் மேற்கண்ட 400 வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இத்திட்டத்தை மீதமுள்ள 1400 வீடுகளுக்கும், அதைத்தொடர்ந்து அந்த வார்டில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கும் விரிவு படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது’’ என்றார்.

இத்திட்டத்தை வடிவமைத்த தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் செளந்தரராஜன் கூறியதாவது: 17-வது வார்டில் கவுண்டம்பாளையம், சேரன் நகர், அபிராமிநகர் என 15-க்கும் மேற்பட்ட வீதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்காக ஒரு வீதியில் 20 வீடுகளுக்கு ஒரு பெட்டி பொருத்தப்பட்டிருக்கும்.

அதில், வீடுகளுக்கு தேவையான மீட்டர்கள், குழாய்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் கடந்தவுடன், சென்சார் மூலம் கிடைக்கும் சிக்னல் அடிப்படையில் வால்வு தானியங்கியாக மூடிக்கொள்ளும். ஒருவருக்கு 135 லிட்டர் என, ஒரு குடும்பத்தில் எவ்வளவு பேர் உள்ளனரோ அதற்கேற்ப கணக்கிடப்படும். உதாரணத்துக்கு 5 பேர் என்றால் 675 லிட்டர் என அந்த வீட்டுக்கு குறிக்கப்பட்டிருக்கும்.

அதன்படி, தொட்டியிலிருந்து குடிநீர் குழாய் வழியாக தொடர்புடைய வீட்டுக்கு விநியோகிக்கப்படும். 24 மணிநேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பிடித்துக் கொள்ளலாம். ஒருநாள் அந்த குடிநீரை பெறாமல் விட்டால், அதை மறுநாள் சேர்த்து பெற முடியாது. இதற்கான பிரத்யேக செயலி மூலம், எவ்வளவு குடிநீர், எவ்வளவு வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்க முடியும்’’என்றார்.

x