முதலில் வாங்கிய அம்பாசிடர் காரை பழுது நீக்கி மீண்டும் பயன்படுத்தும் புதுச்சேரி முதல்வர்!


புதுச்சேரி: முதன்முதலில் வாங்கிய அம்பாசிடர் காரை பழுது நீக்கி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று முதல் மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி உள்ளார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு முதன் முதலில் அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கினார். அந்த வெள்ளை நிற அம்பாசிடர் காரை 20 ஆண்டுகள் வரை பயன்படுத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அந்தக் கார் பழுதானதால் அதைப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்தார். இந்த நிலையில், மீண்டும் அந்தக் காரை பயன்படுத்த முடிவெடுத்தார். அதைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுமார் ரூ.5 லட்சம் செலவில் பழுது நீக்கப்பட்ட கார் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டது.

வைகாசி விசாகமான இன்று பூஜை செய்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு விருப்பமான கார் இருக்கையில் முதல்வர் ரங்கசாமி அமர்ந்தார். இது தொடர்பாக முதல்வர் தரப்பினர் கூறியது: “அண்மையில் முதல்வருக்கு விருப்பமான யமஹா டூவீலரை சரி செய்து மீண்டும் அவர் பயன்படுத்த தொடங்கினார். அதில் வந்துதான் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். அதேபோல் தான் முதன்முதலில் வாங்கிய காரையும் மீண்டும் பயன்படுத்த விரும்பினார்.

அதன்படி அன்மையில் முதல்வருக்கு விருப்பமான கார் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு பழுது நீக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பழுது நீக்கப்பட்ட தானது காருக்கு முதல்வர் பூஜை செய்தார். இனி வரும் நாட்களில் உள்ளூர் நிகழ்வுகளில் தனக்கு விருப்பமான காரில் மட்டுமே பயணிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். தற்போது பல நவீனக் கார்கள் வந்தாலும் அவர் முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் கார்தான் முதல்வரின் முதல் விருப்பம்” என அவர்கள் கூறியுள்ளனர்.

x