இஸ்ரோ அடுத்த பாய்ச்சல்... வானிலை ஆய்வுக்கான ‘இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோள் பிப்.17 அன்று விண்ணில் பாய்கிறது


தயார் நிலையில் இஸ்ரோ செயற்கைக்கோள் ஏவல்

சிறந்த வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்கு உதவும் வகையிலான, புதிய வானிலை செயற்கைக்கோள் ’இன்சாட்-3டிஎஸ்’, பிப்ரவரி 17 அன்று விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ இன்று தெரிவித்தது.

’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி ரகத்தின் எஃப்14 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. பிப்ரவரி 17, சனியன்று மாலை 5:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தயாரிப்பு நிலையில் இன்சாட் -3டிஎஸ்

வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகள், நிலம் மற்றும் கடல் பரப்புகள் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் தற்போது செயல்பாட்டில் உள்ள ‘இன்சாட்-3டி’ மற்றும் ’இன்சாட்-3டிஆர்’ செயற்கைக்கோள்களுடன் இணைந்து வானிலை ஆய்வு சேவைகளை அதிகரிக்கும்.

பூமியின் மேற்பரப்பைக் கண்காணிப்பது, கடல்சார் அவதானிப்புகள் மற்றும் அதன் சுற்றுச்சூழலில் வானிலை முக்கியத்துவம் வாய்ந்த கண்காணிப்புகளை மேற்கொள்வது, வளிமண்டலத்தின் பல்வேறு வானிலை கணிப்புகளின் சுயவிவரத்தை வழங்குதல் மற்றும் செயற்கைக்கோள் உதவி தேடல் மற்றும் மீட்பு சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவை புதிய இன்சாட் செயற்கைக்கோளின் அனுகூலங்களில் அடங்கும்.

புவிப்பரப்பினை ஆராயும் செயற்கைக்கோள்களில் ஒன்று

இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), மத்தியதர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (NCMRWF), இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) பெருங்கடல் தகவல் சேவைகள் (INCOIS) மற்றும் பல நிறுவனங்கள், மேம்படுத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் வானிலை சேவைகளை வழங்க இன்சாட் -3டிஎஸ் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்த தயாராக உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

x