கோவை - சரவணம்பட்டியில் வாகன நெரிசலுக்கு வழிவகுக்கும் பேருந்து நிறுத்தங்கள்!


கோவை - சத்தி சாலை சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் பிரிவு சந்திப்பை கடந்து செல்லும் பேருந்துகள். | படங்கள்: ஜெ.மனோகரன் |

கோவை: கோவை சத்தி சாலை, சரவணம்பட்டியில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ள பேருந்து நிறுத்தங்களை மாற்றியமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் சத்தியமங்கலம் சாலை முக்கியமானதாகும். தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட இச்சாலையில், ஏராளமான குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

காந்திபுரத்தில் தொடங்கும் இச்சாலை, கணபதி, சரவணம்பட்டி, அன்னூர், புஞ்சை புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் செல்கிறது. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை சில இடங்களில் 4 வழித்தடமாகவும், சில இடங்களில் இரு வழித்தடமாகவும் அமைந்துள்ளது. சரவணம்பட்டியில் சத்தி சாலையில் 4 இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுவத்துவதால் அவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து கோவை விசுவாசபுரத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் கே.மோகன்ராஜ் கூறியதாவது: சரவணம்பட்டியில் சத்தி வழித்தடம் துடியலூர் பிரிவு சந்திப்பில் (சிக்னல் அருகே) பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு பேருந்துகளை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, இச்சந்திப்பில் சிக்னலை கடந்து 50 மீட்டர் தூரம் தள்ளி நிற்கும் வகையில் பேருந்து நிறுத்தத்தை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு எதிர்புறமுள்ள கோவை வழித்தடத்தில், துடியலூர் பிரிவு சிக்னல் சந்திப்புக்கு முன்னதாக, கஸ்தூரி சூப்பா் மார்க்கெட் அருகே பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.

இங்கு சிக்னலை கடந்து 30 மீட்டர் தூரத்தில் சத்திரம் தண்ணீர் தொட்டி அருகே பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இந்த இடத்தில் நிறுத்தாமல், சிக்னலுக்கு முன்பே நிறுத்துவதால் நெரிசல் அதிகரிக்கிறது.

கோவை சரவணம்பட்டியில், கோவை வழித்தடத்தில் துடியலூர் பிரிவு அருகே
அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததால்
பயன்பாடு இல்லாமல் உள்ளது.

அடுத்ததாக, சரவணம்பட்டியில், சிக்னல் சந்திப்புக்கு அருகே அரசு தொடக்கப்பள்ளி அருகே பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனாலும் நெரிசல் ஏற்படுகிறது. 50 மீட்டர் தூரம் தள்ளி நிறுத்தும் வகையில் பேருந்து நிறுத்தத்தை மாற்றினால் வாகன நெரிசலை தவிர்க்கலாம். இதற்கு எதிர்ப்புற சாலையில், சோதனைச்சாவடி உள்ளது.

இதற்கு பின்புறம் காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகருகே தேவையில்லை. இச்சோதனைச் சாவடியை விசுவாசபுரத்துக்கு இடமாற்றிவிட்டு, இச் சோதனைச்சாவடி செயல்பட்ட இடத்துக்கு அருகே பேருந்து நிறுத்தத்தை மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு மேற்கண்ட 4 இடங்களில் பேருந்து நிறுத்தங்களை மாற்றியமைப்பதன் மூலமும், இச்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலமும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கலாம். இதற்கு காவல்துறை, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சரவணம்பட்டியில் ஜி.கே.எஸ் நகரிலிருந்து துடியலூர் செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச் சாலை செல்கிறது. அதேபோல், சரவணம்பட்டி தொலைபேசி அலுவலகம் அருகேயிருந்து விளாங்குறிச்சிக்கு 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச் சாலை செல்கிறது. இந்த இரு சாலைகளையும், நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அகலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்புப் பிரிவு கோட்டப் பொறியாளர் மனுநீதி கூறும்போது, ‘‘பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் தொடர்பாக கோரிக்கைகள் வந்தால், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீஸார், போக்குவரத்துத் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து கூட்டாய்வு மேற்கொள்ளப்படும்.

பின்னர், ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, சத்தி சாலையில் பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றங்கள் தொடர்பாக தொடர்புடையவர்கள் மனு அளித்தால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘மேற்கண்ட போக்குவரத்து நிறுத்தங்களால் நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

x