கோவை: சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், சேலம் உட்பட 78 ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித் தருவதில் கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கோவையில் இருந்து நாளொன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரையும், சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து தினசரி சுமார் 90 ஆயிரம் பேர் முதல் 1 லட்சம் பேர் வரையும் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
ரயில்களில் பயணம் செய்ய கவுன்ட்டர்களுக்கு நேரடியாகச் சென்றோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ, செல்போன் செயலி மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இதனிடையே, டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மூலம் கவுன்ட்டர்களில் டிக்கெட்டுகளை எடுக்கும் வகையில் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ‘க்யூ ஆர் ஸ்கேன்’ மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்தில் உள்ள கோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உட்பட 78 ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் ‘க்யூ ஆர் கோடு' மூலம் பணம் செலுத்தி முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை எடுக்கலாம். இந்த சேவை தற்போது பயணி களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா கூறும்போது, ‘‘க்யூ ஆர் கோடு ஸ்கேன் வசதி மூலம் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.
பே டி எம், கூகுள் பே, போன் பே வாலட்களில் இருந்து டிக்கெட் முன்பதிவுக்கு பணம் செலுத்த முடியும். சில்லரை பிரச்சினை எதுவும் இருக்காது. இதன் மூலம் நடைமேடை டிக்கெட்டுகளையும் பெற முடியும். பணப் பரிவர்த்தனை இல்லாத இந்த புதிய சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.