ரிசர்வ் வங்கி தடையை அடுத்து, பேடிஎம் பணப்பரிவர்த்தனை செயலியில், இருப்பில் உள்ள தங்களது பணம் என்னாகுமோ என்ற கவலை வாடிக்கையாளார் மத்தியில் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேடிஎம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்காக புழக்கத்தில் உள்ள யுபிஐ சேவை செயலிகளில் ஒன்று பேடிஎம். இதன் சேவையை சுமார் 8.9 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். முன்னணி யுபிஐ செயலியாக விளங்கி வந்த பேடிஎம் கடந்த 2 வருடங்களாக ரிசர்வ் வங்கியின் கண்டனங்களுக்கு ஆளாகி வந்தது. இந்த நிறுவனம் தொடர்பான தணிக்கைகளில், ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு அப்பாற்பட்டு நடந்துகொண்டதாக தெரிய வந்தது. பலமுறை அபராதம் விதித்த பிறகும் பேடிஎம் வழிக்கு வராததால், அதன் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி அண்மையிக் தடைவிதித்துள்ளது.
பேடிஎம்-க்கு எதிரான தடையானது வரும் பிப்.29 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதிதாக வைப்புத்தொகை பெறவோ, கடன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவோ, வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு செய்யவோ கூடாது. மேலும் பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை உள்ளிட்ட பேடிஎம்-இன் வழக்கமான சேவைகளை வழங்கவும் அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில், பேடிஎம் சார்பில் புதிய வாடிக்கையாளர்களை இணைக்கத் தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
இதனிடையே பேடிஎம் நிறுவனத்துக்கு எதிரான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், பேடிஎம் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பேடிஎம் வாலெட்டில் உள்ள தங்களது இருப்புத்தொகையை வெளியே எடுப்பது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, தனது வாடிக்கையாளர்களை எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் வாயிலாக தொடர்பு கொண்டிருக்கும் பேடிஎம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
முக்கியமான அப்டேட் என்ற தலைப்பில் ‘பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணம் அவர்களது பேடிஎம் கணக்கில் பத்திரமாக உள்ளது’ என்பதை அழுத்தமாக தெரிவித்திருக்கிறது. பிப்.29-க்குப் பின்னரே வாடிக்கையாளர்கள் தங்களது பேடிஎம் கணக்கில் இருப்பை அதிகரிப்பதோ, புதிதாக தொகையை சேர்ப்பதோ இயலாது என்று பேடிஎம் விளக்கியுள்ளது. மற்றபடி விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், எப்போது வேண்டுமானாலும் தங்களது பேடிஎம் கணக்கில் உள்ள தொகையை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. அவ்வாறு திரும்பப் பெறுவது பிப்.29க்குப் பின்னரும் சாத்தியம் என்றும் பேடிஎம் விளக்கமளித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...