மேட்டூர்: மேட்டூர், ஆனைமடுவு, கரிய கோவில் அணைகளில் மீனவர்கள் மூலமாக கடந்தாண்டில் 2,210 டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன, என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையி்ல், பாசனத் துக்காக ஆண்டு முழுவதும் நீர் இருப்பு தக்க வைக்கப்படுவதால், அணையில் மீன் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. அணையில் கிடைக்கும் மீன்கள், உரிமம் பெற்றுள்ள மீனவர்களால் பிடிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கம் மூலம் விற்கப்படுகிறது.
அணையில் மீன் வளத்தைப் பெருக்கும் பணியில், மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில், மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப் படுகின்றன.
இந்த மீன் குஞ்சுகள், ஆண்டுதோறும் ஜூலையில் தொடங்கி, அடுத் தாண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடுவிக்கப்படுகின்றன.
அதேபோல், ஆனைமடுவு, கரியகோவில் அணைகளிலும் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றன. மீன் குஞ்சுகள் வளர்ந்த பிறகு, மீனவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதன்படி, கடந்தாண்டு 3 அணைகளில் இருந்தும் 2,210 டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன, என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலக்கு எட்டப்பட்டது: இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 2023 ஜூலை தொடங்கி, கடந்த ஜூன் வரை மேட்டூர் அணையில் 76.73 லட்சம், ஆனைமடுவு அணையில் 1.30 லட்சம், கரியகோவில் அணையில் 90 ஆயிரம் என 78.93 லட்சம் மீன்கள் விடப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட மீன்கள் 1,535 டன் பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,535 டன் (100%) பிடிக்கப்பட்டுள்ளது. ஆனைமடுவு அணையில் 11 டன் பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 11.023 டன்னும் (100.21%), கரியகோவில் அணையில் 6 டன் பிடிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 6.100 டன்னும் பிடிக்கப்பட்டுள்ளன.
கல்பாசி, கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அணைகளில் தானாக உற்பத்தியாகின்றன. அதன்படி, மேட்டூர் அணையில் 650 டன் பிடிக்க இலக்கு நிர்ணயித்த நிலையில் 650.236 டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. ஆனைமடுவு அணையில் 6 டன் பிடிக்க நிர்ணயித்த இலக்கில் 6.002 டன்னும், கரியகோவில் அணையில் 2 டன் பிடிக்க நிர்ணயித்த இலக்கில் 2.004 டன்னும் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
மூன்று அணைகளில் ஒட்டு மொத்தமாக 2,210 டன் கட்லா, ரோகு, மிர்கால், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் பிடிக்க இலக்கு நிர்ணயித்த நிலையில், 2,210.371 டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. 3 அணைகளிலும் நிர்ணயித்த இலக்கில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு, மீன்களும் பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.