பம்ப்செட், வார்ப்பட நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு - காரணமும், புதிய திட்டமும்


கோவை: தேசிய அளவில் பம்ப்செட் மற்றும் வார்ப்பட தேவையில் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்து வருவதால் பணி ஆணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரச்சினையை எதிர்கொள்ள தற்காலிகமாக மாற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (இப்மா) தலைவர் கார்த்திக், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் ஆகியோர் கூறும்போது, “ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை பம்ப்செட் பணி ஆணைகள் சீராக இருந்தன.

ஜூலை மாதத்தில் மழையின் தாக்கத்தால் பணி ஆணைகள் வெகுவாக குறைந்தன. வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது” என்றனர்.

வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கான தேசிய அமைப்பு ‘தி இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’ (ஐஐஎப்) கோவை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறும் போது, “பம்ப்செட் மட்டுமின்றி டிராக்டர், கார்கள் உள்ளிட்டவற்றுக்கான பணி ஆணைகள் கடந்த மாதம் வெகுவாக குறைந்துள்ளன. இதன் தாக்கம் தற்போது உற்பத்தி பணிகளில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

கோவை குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முக குமார் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் 80 சதவீத நிறுவனங்கள் பம்ப்செட் தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பணி ஆணைகளை நம்பியே செயல்படுகின்றன.

தற்போது பம்ப்செட் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அனைத்து சனிக்கிழமைகளிலும் கட்டாய விடுமுறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

x