தெருக்களை அடையாளம் காண உதவும் மதுரை - நத்தம் ‘மேம்பால தூண்கள்’: வெளிச்சம் பெற்ற புது ஐடியா!


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை நத்தம் மேம்பாலத்தில் உள்ள பிரமாண்ட தூண்களில் போடப்பட்டுள்ள ‘எண்’களை கொண்டு, இந்த சாலையின் இருபுறமும் உள்ள குடியிருப்பு சாலைகளை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு வருகிறார்கள். அதனால், தற்போது வீட்டு முகவரிகளில் நத்தம் மேம்பாலத்தின் தூண்களும் முக்கிய அடையாளமாக இடம்பெற தொடங்கி விட்டன.

மதுரை தல்லாக்குளம் முதல் நத்தம் வரை 35 கி.மீ. தொலைவிற்கு ரூ.1,028 கோடியில் நான்கு வழிச்சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த சாலையின் சிறப்பாக, தல்லாக்குளம் முதல் ஊமச்சிகுளத்தை அடுத்த மாரணி வரை 7.3 கிமீ தூரத்துக்கு ரூ.613 கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையையும், பறக்கும் பாலத்தையும் கடந்த ஆண்டு பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை நகருக்குள் நுழைந்து இந்த மேம்பாலத்திலும், அதன் கீழ் உள்ள சாலையில் செல்லக்கூடிய மக்களுக்கு, வெளிநாடுகளில் சென்ற பயண அனுபவத்தையும், பிரம்மாண்டத்தையும் கொடுக்கிறது.

மதுரை நகருக்குள் இருந்து சென்னை செல்லக்கூடிய பொதுமக்கள், ஒத்தக்கடை, மேலூர், கொட்டாம்பட்டி வழியாக செல்லாமல் தல்லாக்குளத்தில் இருந்து நேரடியாக நகர போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ஊமச்சிக்குளம், நத்தம், துவரங்குறிச்சி வழியாக திருச்சியை அடையலாம். அதனால், 20 கி.மீ., பயண தூரம் குறைவதோடு நகரப் போக்குவரத்து நெரிசலில் இருந்தும் மக்கள் தப்பிக்கலாம்.

இப்படி மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் நெரிசல் இல்லாத போக்குவரத்திற்கும் இம்மேம்பாலம் பயன்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது இந்த மேம்பாலத்தை தூக்கி நிறுத்தும் பிரம்மாண்ட தூண்களில் போடப்பட்டுள்ள ‘எண்’கள் சாலையின் இரு புறமும் உள்ள குடியிருப்புச் சாலைகளை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கவும் உதவுகிறது.

இந்த நத்தம் மேம்பாலத்தில் மொத்தம் 268 பிரம்மாண்ட தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணையும் வரிசைப்படுத்தி சாலையில் செல்லக்கூடிய வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியக்கூடிய வகையில் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் செல்லும் சாலையின் இரு புறமும் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிக்குளம் வரை, நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு சாலைகள் பிரிகின்றன.

மேம்பாலம் அமைப்பதற்கு முன், இந்த சாலையில் உள்ள குடியிருப்புகளை அதன் குடியிருப்பு சாலைகளின் பெயர்களை குறிப்பிட்டு முகவரியை அடையாளம் காண்பார்கள். தற்போது, இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் தூண்களில் குறிப்பிடப்பட்டுள் எண்களை அடையாளப்படுத்தி, 10-ம் நம்பர் தூணில் இருந்து பிரியும் சாலை, 58-ம் நம்பர் தூண்களில் இருந்து பிரியும் சாலை என இப்பகுதி குடியிருப்பு சாலைகளை மக்கள் அடையாளம் சொல்கிறார்கள்.

சமீப காலமாக, இப்பகுதி குடியிருப்பு முகவரிகளிலும், நத்தம் மேம்பாலத்தின் தூண்களின் ‘எண்’ணும் இடம்பெற ஆரம்பித்துள்ளது. ஆக, இந்த பிரம்மாண்ட தூண்கள், நத்தம் மேம்பாலத்தை 7.3 கி.மீ., தொலைவுக்கு தாங்கிப்பிடிப்பதோடு இப்பகுதி குடியிருப்புகளுக்கும் முக்கிய அடையாளமாக திகழ்கிறன.

x