லம்பாடி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை!


மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்திய லம்பாடி சமூக தலைவர்கள். (அடுத்த படம்) லம்பாடி பெண்களின் பாரம்பரிய நடனம்.

திருவண்ணாமலை: தமிழகத்தில் உள்ள லம்பாடி இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு லம்பாடிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பாரத் ஜி.ரவி நாயக், இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, “தமிழகத்தில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் லம்பாடி சமூகத்தினர் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள லம்பாடி சமூகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, பிஹார், ஹரியானா மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலிலும் மற்றும் கர்நாடகா, பஞ்சாப், புதுடெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கத்தில் ஆதிதிராவிடர் பட்டியலிலும் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் லம்பாடி சமூகத்துக்கு 4 சதவீத தனி இடஒதுக்கீடு உள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் எஸ்.சி.,-எஸ்.டி., பட்டியலில் உள்ளபோது, தமிழகத்தில் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் கல்வி, வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுகிறோம். திருவண்ணாமலை ஆட்சியராக ராஜேந்திரன் பணியாற்றியபோது, மானுடவியல் துறையினர் மூலமாக கடந்த 2009-ல் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் லம்பாடி சமூகத்தினரின் கலாச்சாரம், பிறப்பு, இறப்பு சடங்குகள், குலதெய்வ வழிபாடு ஆகியவை பழங்குடியினர் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் குருமன்ஸ், லம்பாடி, நரிக்குறவர், படுகர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில், தருமபுரியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் செந்தில் முன்னிலையில் முதல்வரை சந்தித்து லம்பாடி, குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். இதற்கிடையில், குருமன்ஸ், நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இதில் நரிக்குறவர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

லம்பாடி பெண்களின் உடையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி.

பாட்டு பாடிதான் எங்கள் இன மக்களின் திருமண சடங்கு நடைபெறும். இறுதி சடங்கும் பழங்குடியினர் முறையிலேயே இருக்கும். எங்கள் இனத்துக்கு பாரம்பரிய உடைகள் உள்ளன. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெண்கள் தின விழாவில், லம்பாடி பெண்கள் அணியும் உடையை அணிந்துள்ளார். குல தெய்வ வழிபாடும் அவ்வாறுதான் நடைபெறும். எங்கள் இனத்துக்கு தனி பேச்சு, மொழி உள்ளது. ஆனால், அதற்கு எழுத்து வடிவம் கிடையாது. தண்டா என்ற சொல்லில் உள்ள கிராமங்களில், லம்பாடி இன மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து லம்பாடி இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகிறோம். எங்களது கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் டி.ரவீந்திரநாயக் உள்ளிட்டோருடன் புதுடெல்லி சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, லம்பாடி இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மனு அளித்துள்ளோம். திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் அண்ணாதுரையின் தனி நபர் மசோதா மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கையை, பாராளுமன்ற பழங்குடியினர் நலக்குழுவுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதேபோல், மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவை சந்தித்தும் மனு அளித்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்” என்றார்.

x