பனியன் கிடங்குகளாக மாறிய திரையரங்குகள் - திருப்பூர் திரைத் துயரம்!


பனியன் கிடங்காக மாறிய சாந்தி திரையரங்கம்.

திருப்பூர்: ஆழ்மனதின் நினைவு பெட்டகங்களில் கனவு நாயகன், நாயகிகள், நகைச்சுவை, துரோகம் என மக்களின் அன்றாட பொழுதுபோக்கு தலமாக இருந்த இடம் திரையரங்கம். மனிதன் தன் மகிழ்ச்சியை கொண்டாட இன்றைக்குபல வழிகள் இருக்கின்றன. ஆனால், முன்பெல்லாம் பலரின் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக திரையரங்குகளும், திரைப்படங்களும் மட்டுமே இருந்துள்ளன.

திருப்பூரில் தொழில் வளர்ந்தபோது பலரின் கொண்டாட்ட திருவிழா களமாக இருந்த திரையரங்குகள் இன்றைக்கு உருமாறிவிட்டன. ஒரு காலத்தில் திருப்பூரின் அடையாளமாக இருந்த யுனிவர்சல் திரையரங்கம் இன்றைக்கு தரைமட்டமாகி, அந்த பிரம்மாண்டத்தின் சுவடே துளியும் இல்லை. கஜலெட்சுமி திரையரங்கம் இடிக்கப்பட்டு, துணிக்கடையாக திறக்கப்பட உள்ளது.

புஷ்பா திரையரங்கம் இடிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தாலும், பெயர் மட்டும்திருப்பூரின் அடையாளமாக இருக்கிறது. ஜோதி, தனலட்சுமி, ராகம் என பல்வேறு திரையரங்குகள் இடிக்கப்பட்டுள்ளன. நடராஜ் திரையரங்கம் பனியன் கிடங்காகி பல ஆண்டுகளாகிவிட்டது. ராம் - லட்சுமண் திரையரங்கமும் பனியன்கிடங்காகி விட்டது. அந்தவரிசையில் புதிய பேருந்துநிலையப் பகுதியில் இருந்த சாந்தி திரையரங்கமும், தற்போது மாத வாடகைக்கு பனியன் கிடங்காகிவிட்டது.

இதுதொடர்பாக சாந்தி திரையரங்க உரிமையாளர் வெ.ரெங்கதுரை கூறியதாவது: 970 இருக்கைகளுடன் திரையரங்கை நடத்தினோம். ஆனால், இரண்டு மடங்குக்கும் அதிக மான கூட்டம் படம் பார்க்க காத்திருக்கும். திரைப்பட பெட்டிகள் திரையரங்குக்கு வருவதையே திருவிழாபோல் கொண்டாடுவோம்.

இடிக்கப்பட்டு தரைமட்டமாக காணப்படும் திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம்.

திருப்பூரில் பின்னலாடை வளர்ந்தபோது, எங்கள் தொழிலும் சேர்ந்தே வளர்ந்தது. 20 பேர் வேலை பார்த்தார்கள். உழைக்கும் மக்களுக்கான பொழுதுபோக்கு இடமாகவும், அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவும் திரையரங்கம் இருந்தது. ஆனால், கரோனாவுக்கு பிறகு திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்தது. திரைப்படங்களுக்கான பட்ஜெட் எகிறியது.

அதாவது நடிகர், நடிகையின் சம்பளம் உள்ளிட்ட விஷயங்களால் திரைப்படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் அதிகம் முன்வராமல் போனது என பல்வேறு விஷயங்களால் இன்றைக்கு திரையரங்குகள் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால், மல்டி திரையரங்குகள் தாக்கு பிடிக்கின்றன. இனி அவைதான் தாக்குப்பிடிக்கமுடியும். ஓடிடி யுகத்தில் தனித்திரையரங்குகளை நடத்துவது என்பது இனி இயலாத காரியம் தான். இதனால், இன்றைக்கு பனியன் கிடங்குக்கு வாடகைக்கு விட்டுள்ளேன்.

பனியன் கிடங்காக மாறிய ராம்- லட்சுமண் திரையரங்கம்.

நல்ல திரைப்படங்களை திரையிட்டு ஓடும்போது, திரையரங்குகளும் பிரம்மாண்டமாக தெரியும். தோல்விப்படங்களை பார்க்கும்போதுசோகம் தழுவும். ஏனென்றால் மனிதர்களின்உணர்வுகளோடு பின்னிப்பிணைந்தவை இந்த திரையரங்குகள். அவர்களின் ஆழ்மனதில்திரைப்படச்சுருள் போல், ஞாபகங்கள் எப்போதும் சுருண்டு கிடக்கும். இன்றைக்கு டிஜிட்டல்யுகம் காரணமாக, கரோனாவுக்கு பிறகு தொடர்ச்சியாக படங்கள் கிடைக்காததால், திரையரங்கை அகற்றிவிட்டு பனியன் கிடங்காக மாற்றிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

திரையரங்குகள் தரும் உணர்வு: திருப்பூரை சேர்ந்த திரைப்பட ஆர்வலர் த.நாகராஜன் கூறும்போது, “1981-ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் கட்டப்பட்டது. முதல் படமாக மோகன் -சுகாசினி நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே திரையிடப்பட்டது. நடிகர் சிவகுமார் திரையரங்கை தொடங்கி வைத்தார். இந்த திரையரங்கம் கட்டப்பட்ட பகுதி, அப்போது ஒத்தபனை மரம் மேடு என்று அழைக்கப்பட்டது.

அதனால், அருகில் சுடுகாடு காரணமாக பேய்களின் நடமாட்டம் இருந்ததாக பேச்சுகள் இருந்தன. இரவுக் காட்சிக்கு கூட்டம் இருக்காது.பின்னர் ரஜினிகாந்த் நடித்த கழுகு படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இடம், இன்றைக்கு கரோனா காலகட்டத்துக்கு பிறகு படங்கள் பெரிதாக ஓடாமல் இருந்தன. நவீன விஷயங்கள் எவ்வளவு தான் வந்தாலும், தொடுதிரை அலைபேசிகளில் ஹாலிவுட் படத்தை பார்த்தாலும், திரையரங்குகள் தரும் உணர்வு எந்த காலத்திலும் இருக்காது” என்றார்.

x