பஞ்சு விலை ஏற்ற இறக்கத்தின் காரணமாக, உற்பத்தி சீரானபோதும், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், விருதுநகர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நூல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் லட்சக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விசைத்தறி மூலம் டவல், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாவட்டங்களில் மட்டும் நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்ததால், நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஜவுளி உற்பத்தியும் கடுமையாக நசிவை சந்தித்தது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் 54 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கேண்டி பஞ்சின் விலை, தட்டுப்பாடு காரணமாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது.
இதன் காரணமாக கடுமையாக நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.80 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை விற்கப்படுவதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜவுளி உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லாததால், வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்து இருப்பதாக நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு காடா துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. அதேபோல் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் டவல் மற்றும் சேலைகளும், கரூரில் வேட்டி, ஜமுக்காளங்களும் பல கோடி மதிப்பில் தேக்கமடைந்துள்ளது. இதனால் நெசவாளர்கள் வேலை இன்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நெசவாளர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகைக்கு, ரேஷன் கார்டுகளுக்கு வழங்கி வரும் இலவச வேட்டி சேலையுடன், 2 டவல்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.