‘பாலருவி’ விரைவு ரயில் இன்று முதல் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: நிறைவேறிய 4 ஆண்டு கால கோரிக்கை!


தூத்துக்குடி: பாலக்காடு - திருநெல்வேலி ‘பாலருவி' விரைவு ரயில் இன்று (ஆக.15) முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படுகிறது. சுமார் 4 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால் தூத்துக்குடி பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாலக்காடு - திருநெல்வேலி இடையே பாலருவி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க, மத்திய ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அந்த ரயிலுக்கான புதிய எண்கள் மற்றும் கால அட்டவணை அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும் ரயில் நீடிக்கப்படாமல் இருந்து வந்தது.

பயணிகள் நலச்சங்கம், தொழில் வர்த்தக சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள், இந்த ரயிலை விரைவாக தூத்துக்குடிக்கு நீட்டிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதன் விளைவாக பாலருவி ரயில் இன்று (ஆக்.15) முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி வரையிலான நீட்டிக்கப்பட்ட புதிய ரயில் சேவையை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி இன்று மாலை 3.45 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

வண்டி எண் 16792 பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயில் தினமும் மாலை 4.05 மணிக்கு பாலக்காடு ரயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு திருநெல்வேலி சந்திப்புக்கும், காலை 6.15 மணிக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்துக்கும், 6.40 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கும் வந்து சேரும்.

வண்டி எண் 16791 தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி விரைவு ரயில் தினமும் இரவு 10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, இரவு 10.08 மணிக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம், இரவு 11.25 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு சென்று மறுநாள் நண்பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறவழி பாதையில் இயங்கும் முதல் ரயில்: பாலக்காடு- தூத்துக்குடி பால ருவி விரைவு ரயில் மணியாச்சி புறவழி ரயில் பாதை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மணியாச்சி புறவழி ரயில் பாதை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த புறவழி பாதை வழியாக சரக்கு ரயில்கள் மட்டுமே இதுவரை இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதலாவது பயணிகள் ரயில் அந்த வழியாக இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையை பயணிகள் வரவேற்றுள்ளனர்.

இதன் மூலம் மேலும் சில ரயில்களை தூத்துக்குடி வரை நீட்டிப்பதற்கும், தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயில் நேரத்தை குறைப்பதற்கும், தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும் வாய்ப்பாக அமையும் என பயணிகள் நலச்சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

பயணிகள் ரயில் ஞாயிறன்று ரத்து: வண்டி எண் 06667/ 06668 தூத்துக்குடி- திருநெல்வேலி- தூத்துக்குடி பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் பெரும்பாலும் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்களே பயணித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் பயணிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் ரத்து செய்யப்படுவதாகவும், இது, வரும் 18-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

x