ஒற்றுமையின் பலத்தால் உயரும் இந்திய தேசத்தின் பெருமை | ஆக.15 - சுதந்திர நாள் சிறப்பு பகிர்வு


இந்திய தேசம், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்பட்டு கிடந்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை அடைந்தது. நாடு விடுதலை அடைவதற்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, ‘ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்று எழுதிய தீர்க்கதரிசி நம் தமிழகத்தில் பிறந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

நம் இந்திய தேச விடுதலைப் போரில் நாம் அறிந்த தலைவர்கள் மட்டுமில்லாமல், பெயரே அறியாத இலட்சக்கணக்கான தியாகிகள், புரட்சியாளர்களின் உயிர் தியாகத்தால் பூத்ததே இந்தியச் சுதந்திர தேசம். நம் நாடு விடுதலையடைந்து 77-வது ஆண்டுகள் முடிவுற்று, 78-ஆவது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கின்ற இனிய தருணத்தில், இன்றைக்கு சுதந்திர தினத்தை வாட்ஸ் அப், முகநூல் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்திய தேச விடுதலை நாள்: சுதந்திர இந்தியாவில் தொடக்கத்தில் வீசத்தொடங்கிய காற்று ஒரு பக்கம் ஆனந்தமாகவும், இன்னொரு பக்கம் சற்றே வேதனையுடனும் கடந்துள்ளது என்பதே சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களின் வழி நாம் அறியும் செய்தியாகும். 1947-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டிஷ் மக்களவையில் அன்றைய பிரதமர் கிளெமென்ட் அட்லீ, இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் மசோதாவைக் கொண்டு வந்தார்.

அதன்படி, இரண்டாம் உலகப்போரில் தான் சரணடைவதாக ஜப்பான் அறிவித்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியே இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கிட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. நாட்டின் முக்கிய ஜோதிடர்களான சூர்யநாரயணன் வியாஸ், ஹர்தேவ்ஜி கணித்தபடி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவு சுதந்திரம் வழங்க நேரம் குறிக்கப்பட்டது.

அன்று இரவு 11 மணிக்கு டெல்லி அரசியல் நிர்ணய சபையில் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூட்டம் கூடியது. இரவு 11.58 மணிக்குச் சுதந்திர இந்தியாவுக்காக எழுதப்பட்ட ஆவணங்களில் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் கையெழுத்திட்டார். அப்போது சபையின் மேல்மாடத்திலிருந்து 12 மணிக்குச் சங்கொலி முழங்கப்பட்டது.

புதிய வரலாற்றில் இந்தியா: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு ‘விதியுடனான ஒப்பந்தம்’ (Tryst with Destiny) என்ற தலைப்பில், “நீண்ட நெடுநாட்களுக்கு முன்பாக நாம் விதியைக் குறித்த நேரத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த நேரம் வந்துவிட்டது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில், இந்தியா சுதந்திரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும்.

ஒரு வரலாறு முடிவுக்கு வந்து, மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது. இப்புனிதமான நேரத்தில், இந்திய மக்களாகிய நாம் மனிதக் குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்” என்று முழங்கினார்.

இதனையடுத்து, உறுதிமொழி எடுக்கும் விழா தர்பார் மண்டபத்தில் காலை 8.30 மணிக்குத் தொடங்கியது. 500-க்கும் அதிகமான முக்கிய நபர்களும், 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களும் புதுடெல்லியில் கூடினர். தேச சுதந்திரத்தின் வெற்றி கொண்டாட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தார் காந்தி. இந்தியச் சுதந்திர போரை அகிம்சை வழியில் தலைமையேற்று நடத்திய காந்தியின் மெளனம் பலரையும் யோசிக்க வைத்தது.

மனம் வருந்திய காந்தி: சுதந்திரத்துக்கு இரு வாரங்களுக்கு முன்பாக டெல்லியை விட்டு வெளியேறிய காந்தி, காஷ்மீர், கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்து, கலவரங்களை அடக்கும் முயற்சியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தி வந்தார். “தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியாவில் எனக்கு இடமே இல்லை. வன்முறை வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில் வாழ எனக்கு விருப்பமே இல்லை” என்று அத்தருணத்தில் மிகுந்த மனவருத்தத்துடன் கூறினார் காந்தி.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் நாடு சுதந்திரமும் அடைந்தது. கொல்கத்தாவில் நடந்த கலவரங்களைத் தணிப்பதற்காக அங்குச் சென்றிருந்த காந்தி, சுதந்திர தினத்தன்று முழுவதும் உண்ணாவிரதம் இருந்தார். கலவரங்களைத் தனது பாணியில் அடக்கவும் செய்தார். நாட்டின் முதல் சுதந்திர கொண்டாட்டம் ஒரு பக்கம் ஆனந்தக் களிப்புடன் நடைபெற்றாலும், அதனை முழுமையாகக் கொண்டாடாத காந்தி ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார்.

எல்லோரும் இந்திய மக்கள்: முதல் சுதந்திர கொண்டாட்டத்தை முழுமையாகச் சுவாசிக்க முடியாமல் மகாத்மா காந்தி திணறியது போலவே, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், இன்னும் நம் இந்திய மக்களிடையே மதம், மொழி, சாதி சார்ந்த வேற்றுமையால் ஏற்படும் பிரச்சினைகளால் நாமும் சுவாசிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறோம்.

நாட்டின் முன்னேற்றப் பாதையில் தடைக் கற்களாக நிற்கும் இத்தகைய வேற்றுமைகளைக் களைந்தால் மட்டுமே தூய்மையான சுதந்திர காற்றைச் சுவாசிக்க முடியும் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி.

‘எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர்இனம். எல்லோரும் இந்திய மக்கள்’ - என்று நாம் எல்லோரும் இந்திய மக்களாக இணைந்து நிற்போம். ஒற்றுமையே நமது பலமென பெருமிதம் கொள்வோம்.

x