மூவர்ணக் கொடி பறக்கும் செங்கோட்டையும், சென்னை கோட்டையும் | ஆக.15 - சுதந்திர நாள் சிறப்பு பகிர்வு


சுல்தான்களின் ஆட்சியில் கடந்த 1206-1506 காலகட்டத்தில் முக்கிய தலைநகராக உருவெடுத்தது டெல்லி. ஒட்டுமொத்த இந்துஸ்தானின் தலைநகர் டெல்லி என 16-ம் நூற்றாண்டில் அறிவித்தார் பாபர். பின்னர், அக்பர் தனது தலைநகரை ஆக்ராவுக்கு மாற்றினார். மீண்டும் டெல்லியையே தலைநகர் ஆக்க முடிவு செய்த ஷாஜகான் அங்கு ஒரு பிரம்மாண்ட கோட்டை அமைக்க 1639-ல் அடித்தளம் அமைத்தார். இதுவே முகலாய கட்டிடக் கலையின் குறிப்பிடத்தக்க சின்னங்களின் ஒன்றாக திகழும் டெல்லி செங்கோட்டை.

ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு, 18-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசு தனது பெரும்பாலான பகுதிகளையும், அதிகாரத்தையும் இழந்தது. 1857-ல் ஆங்கில ஆட்சிக்கு எதிராக சிப்பாய் கலகம் வெடித்தபோது, செங்கோட்டையை நோக்கி அணிவகுத்து சென்ற மக்கள், வயதான பகதூர் ஷா ஜாபரை தங்கள் தலைவராக அறிவித்தனர். பின்னர், இந்த கலகத்தை ஒடுக்கியது ஆங்கில அரசு.

செங்கோட்டையை கைப்பற்றி, பல கலை படைப்புகளை கொள்ளையடித்தனர், பல உள் கட்டமைப்புகளையும் மாற்றினர். இதனால், அவர்களது ஆதிக்கத்தில் இருந்து செங்கோட்டையை மீட்க வேண்டும் என்பது இந்தியர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. 1940-களில் இந்திய தேசிய ராணுவத்தினரை கிளர்ச்சியாளர்களாக ஆங்கிலேய அரசு அறிவித்த நிலையில், அவர்கள் மீதான விசாரணையும் செங்கோட்டையில் நடத்தப்பட்டது. இதுவும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தேசிய உணர்வை வலுப்படுத்தியது.

இதனால்தான், நாடு சுதந்திரம் அடையும்போது, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்ற முடிவு செய்தார் நேரு. 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி பிரின்சஸ் பூங்காவில் தேசியக் கொடியை ஏற்றினார். மறுநாள் 16-ம் தேதி செங்கோட்டையின் பிரதான நுழைவுவாயிலான ‘லாஹோரி கேட்’ முகப்பில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

நமது இறையாண்மை, அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக, அப்போதிருந்து ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை என்ற பெருமைக்குரியது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை. கிரேக்க வீரரான ஜார்ஜ், புனிதர்களில் ஒருவராக வணங்கப்படுகிறார். இவரை நினைவு கூரும்திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1640-ம் ஆண்டில் இந்த நாளில் இக்கோட்டையின் முதன்மை பகுதி கட்டி முடிக்கப்பட்டதால், கோட்டைக்கு இவரது பெயரே சூட்டப்பட்டது. கடந்த 1641-ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக புனித ஜார்ஜ் கோட்டை மாறியது. கடந்த 1740, 50-களில் பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் வசம் மாறி மாறி இருந்தது இக்கோட்டை.

1932 ஜனவரி 26-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பாஷ்யம், ஆங்கிலேய படையின் பாதுகாப்பை மீறி, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் ஏறி, ஆங்கிலேயரின் ‘யூனியன் ஜாக்’ கொடியை கீழே இறக்கி, இந்திய தேசியக் கொடியை பறக்கவிட்டார். 1947 ஆக.15-ம் தேதி முதல் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

x