மூச்சு திணறும் மதுரை மாட்டுத்தாவணி: மேலூர் சாலையில் அமையுமா மேம்பாலம்?


மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு சிக்னலுக்கு காத்திருக்கும் வாகனங்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: மதுரை-மேலூர் சாலையில் ஏற்கெனவே செயல் படும் மாட்டுத்தாவணி எம்ஜிஆர், ஆம்னி பேருந்து நிலையங்கள், பிரபல தனியார் மருத்துவமனைகள், தினசரி சந்தைகள் இவற்றோடு அதிகரிக்கும் பல்லடுக்கு வணிக வளாகங்களால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், கே.கே.நகர் ரவுண்டானா முதல் ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் 1,350-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் வெளியூர்களுக்கு செல்கின்றன. அன்றாடம் 3 லட்சத் துக்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனர்.

அருகிலேயே ஆம்னி பேருந்து நிலையமும் உள்ளதால் இவற்றுக்கு உள்ளே, வெளியே சென்று வரும் பேருந்துகளால் மதுரை-மேலூர் சாலையில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

இவை தவிர, இப்பகுதியில் தற்போது புதிதாக பெரும் வணிக நிறுவனங்கள், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் கொண்ட மால்கள், தனியார் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு பொதுமக்கள், வாகனங்களின் வருகை பெருமளவு அதிகரித் துள்ளது. விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்காவும் அமைய உள்ளது.

24 மணி நேர சந்தைகள்: மேலும் இச்சாலையில் காய்கறி, மலர் சந்தை, நெல் வணிக வளாகம், மீன் சந்தை ஆகியவையும் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் கனரக வாகனங்களின் போக்கு வரத்தும் அதிகமாக காணப்படும்.

இதுதவிர மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் இச்சாலையில்தான் நிறுத்தப் படுகின்றன. இவைதவிர ஏராளமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் இச்சாலையில் உள்ளன.

சென்னை, திருச்சி மற்றும் தென் மாவட்டங் களுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் மதுரை-மேலூர் சாலை வழியாகத்தான் சுற்றுச்சாலைக்கு செல்ல வேண்டும் என்பதால், மாட்டுத்தாவணி முதல் உத்தங்குடி சுற்றுச்சாலை சந்திப்பு வரை விடுமுறை நாட்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க, சில பெரிய நிறுவனங்களை தவிர பிற ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லை. அதனால் சாலையோரங்களில்தான் வாகனங்கள் நிறுத்தப்படு கின்றன.

சாலையோரக் கடைகளின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாட்டுத்தாவணி வழியாக வாகனங் களில் செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன் இரவு நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து
நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள். | படம்: ஜி.மூர்த்தி |

அடுத்தடுத்த சிக்னல்கள்: போக்குவரத்து காவலர்களும் போக்கு வரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த பெரிதும் சிரமப்படுகிறார்கள். தற்காலிக தீர்வாக மதுரை-மேலூர் சாலையில் காய்கறி மார்க்கெட் அருகே ஒரு சிக்னல், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பும், ஆம்னி பேருந்து நிலையம் முன்பும் தலா ஒரு சிக்னல் மற்றும் உத்தங்குடி சந்திப்பில் புதிதாக ஒரு சிக்னல் அமைத்துள்ளனர்.

அடுத்தடுத்து ஒன்றரை கி.மீ.க்குள் அமைத்துள்ள 4 சிக்னல்கள் மற்றும் நெரிசலால் மாட்டுத்தாவணி பகுதியை கடப்பதற்குள் வாகன ஓட்டுநர்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும்போது, மாட்டுத்தாவணியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை, காய்கறி சந்தை, லேக் வியூ சாலை, அண்ணா நகர் வழியாக சுற்றுச்சாலைக்கு போக்குவரத்து போலீஸார் திருப்பி விடுகின்றனர். அதனால் நகர்ப்பகுதியிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப்படி பல்வேறு வழிகளில் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், போலீஸார் அன்றாடம் சிரமப்படுகிறார்கள். ஆனால் உள்ளூர் அமைச்சர்களோ, மற்ற மக்கள் பிரதிநிதிகளோ மாட்டுத்தாவணி பகுதியின் நெரிசலை கண்டுகொள்வதே இல்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே மதுரை-மேலூர் சாலையில் கே.கே.நகர் ரவுண்டானா முதல் ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை மேம் பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மாட்டுத்தாவணி பகுதி மட்டுமின்றி ஒத்தக்கடை பகுதியின் போக்குவரத்து நெரி சலையும் கருத்தில் கொள்ளும்போது, கே.கே.நகர் முதல் மாட்டுத்தாவணி, உத்தங்குடி, ஒத்தக்கடை வழியாக வேளாண் கல்லூரி வரை மேம்பாலம் அமைப்பதே தொலைநோக்குப் பார்வையில் சிறந்த தீர்வாக இருக்கும் என்பது வாகன ஓட்டுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாநகர் போக்குவரத்து காவல்துறையினர் ஒருங்கிணைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

x