நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பூங்காவில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு


கழிவுநீர் துணை உந்து நிலையம் அமைக்கப்பட உள்ள பூங்கா பகுதி.

செங்கல்பட்டு: நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி பூங்காவில், கழிவு நீர் உந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பாக நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட உள்ளது. இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் கழிவு நீர் துணை உந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அதில், 30-வதுவார்டில் உள்ள காமேஷ்வரி நகர், அம்மாய் நகர், ஏ.எல்.எஸ். நகர், எஸ்.ஆர்.அவென்யூ போன்ற குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே, 9 சென்ட் பரப்பளவில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கழிவு நீர் துணை உந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக, நகராட்சிமூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கும் பகுதியைச் சுற்றி பல குடியிருப்புகள் உள்ளன. விநாயகர் கோயில் ஒன்றுஉள்ளது. இந்த கோயிலில் தினசரி வழிபாடும், திருவிழாக்களும் நடைபெறுவதால் மக்கள் அதிகமாக கூடும் பகுதியாக உள்ளது. இங்கே கழிவு நீர் உந்துநிலையம் அமைக்கப்பட்டால் பொது மக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடும், நிலத்தடி நீர் கெட்டு விடும் அபாயமும் உள்ளது என அப்பகுதி மக்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதிகளில் குடியிருக்கும் சந்திரசேகர், திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ராஜ், ராஜசேகர் ஆகியோர் கூறியது: 30-வது வார்டில் உள்ள காமேஷ்வரி நகர், அம்மாய் நகர், ஏ.எல்.எஸ். நகர், எஸ்.ஆர் அவென்யூபோன்ற குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே, 9 சென்ட் பரப்பளவில் பூங்காஉள்ளது. எங்கள் பகுதிக்கு ௭ன இந்தபூங்கா மட்டுமே உள்ளது.

சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் உந்து மையம் அமைக்கும் பட்சத்தில், இங்குவசிக்கும் குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை அனைவரும் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். நிலத்தடி நீர் கெட்டு, காற்று மாசும் அதிகரிக்கும்.

இப்பகுதி உருவாகும்போது பூங்காவுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்காமல், கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. பூங்கா அமைக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கையை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்காமல் தற்போது கழிவுநீர்உந்து நிலையத்தை அமைக்கின்றனர்.

இந்த பூங்கா எங்கள் நகரின் மையப்பகுதியில் இருப்பதால் காற்றோட்ட வசதி போதுமானதாக இருக்கிறது. எங்கள் குடியிருப்புகளின் மையப்பகுதியில் நுரையீரலாக இந்த பூங்கா உள்ளது. அதனால் இங்கு உந்து நிலையம் அமைப்பதை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

மேலும், பொது மக்களிடம் கருத்து கேட்காமல் நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக முடிவுசெய்துள்ளது. மேலும், இந்த பூங்காவில் உந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்து அதனை போட்டோ எடுத்துவிட்டு, அந்த அறிவிப்பு பலகையை அங்கிருந்து நகராட்சிநிர்வாகமே அப்புறப்படுத்தி விட்டது; கேட்டால் சரியான பதில் இல்லை என்றனர்.

இதுகுறித்து கவுன்சிலர் கிரிதரன் கூறியது: கழிவுநீர் உந்து நிலையம்அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். திட்டத்தை கைவிடும்வரையில் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இறுதியாக நீதிமன்றத்தையும் நாட இருக்கிறோம் என்றார்.

நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: எஸ்.ஆர் அவென்யூ பூங்காவில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான். அந்த பகுதியில் வேறு எங்கும்இடம் இல்லாததால் இந்த இடத்தை தேர்வு செய்தோம். பூங்காவில் சிறியஅளவிலேயே நிலையம் அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

மற்ற பகுதிகளில் சிறுவர் பூங்காஅமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் உந்து நிலையம் அமைக்க திட்டமிட்டுஇருக்கிறோம். தற்போது பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. எஸ்.ஆர் அவென்யூ மற்றும், அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதி வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரை இங்கு சேகரித்து, சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர்.

x