சென்னையில் டெங்கு பரவும் அபாயம்: ரெடிமேட் மிஷின்ஹோல்களில் தேங்கும் மழைநீர்


சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் மிஷின் ஹோல்களில் தேங்கியுள்ள மழைநீர். | படங்கள் டி.செல்வகுமார் |

சென்னை: தெருக்களில் புதிதாக கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக ரெடிமேடாக வைக்கப்பட்டுள்ள பெரிய தூண்கள் போன்ற மிஷின்ஹோல்களில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தனி வீடுகள் குடியிருப்புகளாக மாறியதால் வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததுடன் அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் ஆங்காங்கே மனித நுழைவுப் பகுதி வழியாக (மேன் ஹோல்) கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதைத் தடுப்பதற்காக, கழிவுநீர் குழாய்களுக்கு பதிலாக தெருக்களின் மையப் பகுதியில் பெரிய கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் அண்மையில் தொடங்கியது. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியின் 109 மற்றும் 112-வது வார்டுகளில் உள்ள 36 தெருக்களில் ரூ.24 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கு முன்பாக மனித நுழைவுவாயிலுக்குப் பதிலாக தூர் வாருவதற்கு வசதியான இயந்திர நுழைவுவாயில் (Machine Manhole) தெருக்களில் ஆங்காங்கே கான்கிரீட் கலவை இயந்திரம் மூலம் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது தெருவின் ஒரு பகுதியில்மட்டும் 10-க்கும் மேற்பட்ட இயந்திர நுழைவுவாயில்கள் பெரிய பெரிய தூண்கள்போல நிற்கின்றன. அண்மையில் கனமழை பெய்ததால் இவற்றில் மழைநீர் தேங்கி, டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைநீருடன் பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்துபோன மரத்துண்டுகள் உள்ளிட்ட குப்பைகளும் கிடக்கின்றன. விவரம் தெரியாதவர்கள் இதனை குப்பைத்தொட்டியாகக் கருதி குப்பைகளை வீசிச் செல்கிறார்கள். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, “திருவள்ளுவர்புரம் 1-வது தெருவில் இயந்திர நுழைவு வாயில்களை பதித்துவிட்டு, குடிநீர் குழாய்களையும் அவற்றுடன் இணைத்து பணியை முழுவதுமாக முடித்துவிட்டனர்.

ஆனால், திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் இயந்திர நுழைவுவாயில்களை ரெடிமேடாக செய்து வைத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னமும் பணிகள் தொடங்கவில்லை” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இயந்திர நுழைவுவாயில் கான்கிரீட் கட்டமைப்பில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதில், மழைநீர் தேங்காமல் இருப்பதற்கும் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருடன் பேசி வருகிறோம்.

இயந்திர நுழைவுவாயிலின் அடிப்பகுதியில் துளையிட்டு மழைநீர் தேங்குவதைத் தடுக்கலாமா அல்லது வேறுவகையில் வெளியேற்றலாமா என முடிவெடுத்து மழைநீர் விரைவில் வெளியேற்றப்படும்" என தெரிவித்தனர்.

x