ஆடி மாதத்தில் கோயில்களில் தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை உயர்வு


திண்டுக்கல் மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த எலுமிச்சை பழங்களை தரம் பிரிக்கும் தொழிலாளி. படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் மழையால் எலுமிச்சை செடியிலேயே உதிர்வதால், திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து குறைந்துள்ளது. ஆடி மாதத்தில் தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடந்த வாரத்தை விட விலை அதிகரித்து விற்பனையாகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, சிறுமலை அடிவாரம் பகுதிகள், கொடைக்கானல் கீழ்மலை அடிவாரப் பகுதிகளான அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை விளைச்சல் அதிகம் உள்ளது. திண்டுக்கல் ரயில்நிலையம் அருகேயுள்ள சிறுமலை செட் பகுதியில் உள்ள தனி மார்க்கெட்டுக்கு அறுவடையான எலுமிச்சை பழங்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் இந்த மார்க்கெட்டில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுகின்றன.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலையில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் செடியிலேயே பழங்கள் உதிரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.100-க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ எலுமிச்சை ரூ.20 அதிகரித்து ரூ.120-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் அதிகபட்சம் 20 பழங்கள் வரை இருக்கும். இதனால் மொத்த விலையிலேயே பருத்த, மஞ்சள் நிறமுள்ள பழம் ரூ.6-க்கு விற்பனையாகிறது.

சிறிய அளவிலான பழங்கள் ரூ.5 வரை விற்பனையாகிறது. ஆடி மாதத்தில் கோயில்களில் வழிபாடு நடத்த எலுமிச்சை பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாலையில் மழை பெய்தாலும், காலையில் வெளியிலின் தாக்கம் குறையாமலே உள்ளது. இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஆடி மாத திருவிழாக்கள் முடிவடைந்து, தொடர் மழை பெய்யத் தொடங்கினால் எலுமிச்சையின் தேவை குறைந்து விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

x