சுதந்திர தின விழா: சிவகாசியில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரம்


சிவகாசியில் தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

சிவகாசி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசியில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத் தொழில் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். சிவகாசியில் உள்ள அச்சகங்களில் காலண்டர், டைரி, நோட்டுப் புத்தகங்கள், அரசியல் கட்சிகளின் கொடிகள், தேசியக் கொடி, திருமண அழைப்பிதழ்கள், வணிக நிறுவனங்களுக்கான லேபிள்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கடந்த 2 மாதங்களாக தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

துணி, வார்னிஷ் பேப்பர், ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களில் பல்வேறு வடிவங்களில் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளும், தயாரான தேசியக் கொடிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தேசியக் கொடி பேட்ஜ்.

இது குறித்து அச்சக உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்ததால், தேசியக் கொடி விற்பனை மும்முரமாக நடை பெற்றது. இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வரை 60 சதவீத கொடிகள் விற்பனையாகி உள்ளன என்று கூறினர்.

x