மொரீஷியஸில் முதலீடு செய்தால் வரிச்சலுகை: கோவை தொழில்முனைவோரிடம் உறுதி


கோவையில் தொழில்முனைவோருடன் ஆலோசனை நடத்திய மொரீஷியஸ் நாட்டு அதிகாரிகள் குழுவினர்.

கோவை: மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த பல்வேறு சவால்களை எம்எஸ்எம்இ தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள நிலையில், மொரீஷியஸ் நாட்டில் தொழில் தொடங்கினால் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் கோவை தொழில்முனைவோரிடம் உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து விரைவில் கோவை தொழில்முனைவோர் குழு மொரீஷியஸ் செல்ல உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டு அதிகாரிகள் குழுவினர் கோவை தொழில்துறையினருடன் கலந்துரையாடினர். தங்கள் நாட்டில் முதலீடு செய்தால் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதாக அழைப்பு விடுத்துள்ளனர். இதை ஏற்று விரைவில் கோவையை சேர்ந்த தொழில்துறையினர் குழு மொரீஷியஸ் நாட்டுக்கு தொழில் சார்ந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மொரீஷியஸ் நாட்டு நிதித்துறை மற்றும் வணிகத்தறை அதிகாரிகள் சோமில்துத் போலாஹ், ஹெம்ராஜ் ராம்நியால், நெம்சிஹா செபூவா, செட்நாராயணன்சிங், பூல்ரனி ராம்பதாரத், தோவினாஷி, ரேனு,மலையப்பன் நாகலிங்கம், சிவலிங்கம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிதித்துறை அதிகாரி சோமில்துத் போலாஹ் பேசும்போது, “மொரீஷியஸ் நாடு கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. வர்த்தகத் துறையில் முதலீடு செய்தால் சிறப்பான வளர்ச்சி பெறலாம்” என்றார்.

நிதித்துறை அதிகாரி செட்நாராயணன்சிங் பேசும்போது, “இருநாடுகளுடன் இணைந்து வணிக திட்டங்களில் முதலீடு செய்வதால் வரிச்சலுகை, மானியம் உள்ளிட்ட பல பயன்களை பெறலாம். கோவை தொழில்துறையினர் மொரீஷியஸ் நாட்டுக்கு வருகை தருவதால் முதலீடு செய்வதற்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் கள நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். முதலீடு செய்ய விரும்பும் தொழில்முனைவோரை அன்புடன் வரவேற்கிறோம்” என்றார்.

திட்ட இயக்குநர் தோவினாஷி பேசும்போது, “மொரீஷியஸ் நாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக பிரிவுகளில் முதலீடு செய்யும் தொழில்முனைவோருக்கு வழிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன” என்றார்.

மொரீஷியஸ் நாட்டு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் கோவையில் இருந்து தொழில்முனைவோர் குழு மொரீஷியஸ் நாட்டுக்கு தொழில் சார்ந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கண்காட்சி தலைவர் பொன்ராம் ஆகியோர் தெரிவித்தனர்.

x