நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.296 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட புத்தன்அணை குடிநீர் திட்டம் நாளை (12-ம் தேதி) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் நாகர்கோவில் மாநகராட்சியில் இனி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியின் மக்கள் தொகை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இங்குள்ள மக்களுக்கு தேவைப்படும் குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வந்தது. 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணை தண்ணீரை மட்டுமே நம்பியிருந்ததால் நாகர்கோவில் மாநகரில் கோடைகாலம் தொடங்கும் முன்னரே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. அப்போதெல்லாம் பேச்சிப் பாறை அணையில் இருந்து தண்ணீரை முக்கடல் அணைக்கு கொண்டு வந்து, கிருஷ்ணன்கோயில் சுத்திகரிப்பு நிலையத்தில் சமநிலைப்படுத்தப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
ஆனாலும் பற்றாக்குறையால் வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதே கடினமாக இருந்தது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நபர் ஒருவருக்கு தினமும் 100 லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படும் நிலையில் இதுவரை 80 லிட்டர் தண்ணீர் கிடைப்பதே சவாலாக இருந்தது. தினமும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்றால் நாளொன்றுக்கு 500 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்பட்டது.
புத்தன் அணை திட்டம்: இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வந்து சேரும் இடமான புத்தன்அணை பகுதியில் இருந்து நாகர்கோவில் மாநகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக புத்தன் அணை குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இஸ்ரேலை சேர்ந்த நிறுவனம் இத்திட்டத்துக்கான ஒப்பந்ததை்தை எடுத்தது. 2022-ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.111.72 கோடி, தமிழக அரசு 89.33 கோடி, நாகர்கோவில் மாநகராட்சி ரூ.42.57 கோடி, நபார்டு வங்கி ரூ.52.46 கோடி ஒதுக்கி மொத்தம் ரூ.296.08 கோடியில் புத்தன்அணை திட்டம் செயல்படுத்தப்பட்டது. புத்தன்அணையில் ஆற்றில் செல்லும் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் உறிஞ்சி சேமிக்கும் அப்டேக்வால் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 520 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை இதன் மூலம் விநியோகம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்: புத்தன் அணையில் உள்ள நீரேற்று கிணற்றில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன்கோயில் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்றப்படுகிறது. இதற்காக அங்கு ஏற்கனவே உள்ள 12 மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளுடன் புதிதாக 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் தொடங்கி வைக்கிறார்: புத்தன் அணை குடிநீர் திட்ட இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளோட்டம் அடிப்படையில் 4 மாதங்களுக்கு மேலாக நாகர்கோவிலின் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. புத்தன்அணை குடிநீர் திட்டம் நாளை (12-ம் தேதி) முழுமையாக பயன்பாட்டுக்கு வருகிறது. இத்திட்டத்தை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 400 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
நபருக்கு தினமும் 125 லிட்டருக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் ஏற்கெனவே 50,000 குடிநீர் இணைப்புகள் வரை இருந்த நிலையில், புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வருவதை தொடர்ந்து 72,000 இணைப்புகளாக உயர்த்தப்பட்டுள்ளது. புத்தன்அணை கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதால் கோடை காலத்திலும் இனி நாகர்கோவில் மாநகருக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும்.