என்எல்சி நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வலுக்கும் வாரிசு வேலை கோரிக்கை!


விருத்தாசலம்: ‘நாட்டிற்கு மின்சாரமும், நெய்வேலி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் காமராஜர் முதல்வராக இருந்த போது, பிரதமர் நேருவுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் கடந்த 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1957ம் ஆண்டு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி, 1962 முதல் அனல்மின் நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகத்துக்கு அளித்தனர். நாளாவட்டத்தில் மத்திய தொகுப்புக்கு அளிக்கப்பட்டு, பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து மின்சாரம் சென்றது. இதன் மூலம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மட்டுமல்லாது, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் நெய்வேலி யில் வேலை வாய்ப்பு கிட்டியது.

சுமார் 22 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குடும்பத்தினர் நேரடியாகவும், சுமார் 15 ஆயிரம் குடும்பத்தினர் மறைமுகமாகவும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பு பெற்றனர். 500 மெகா வாட் அனல் மின்சாரம் மூலம் உற்பத்தியை தொடங்கிய இந்த பொதுத் துறை நிறுவனம் படிப்படியாக வளர்ந்து, இந்தியா முழுவதும் தனது கிளைகளைத் தொடங்கி, சூரிய ஒளி ஆற்றல் உள்ளிட்ட மரபு சாரா எரி சக்தி மூலமும் மின்சாரம் தயாரித்து, தற்போது மொத்தமாக 6,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது.

மாறிவரும் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப மனிதத் திறனின் தேவை குறைந்து தானியங்கி செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதால், நிறுவனத்தின் மனிதத் திறன் குறைய நேர்ந்தது. வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட என்எல்சி நிறுவனம். ஒரு கட்டத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையினால் லாப நோக்கோடு இயங்க வேண்டிய நிலைக்கு மாறியது.

முதலில் நிறுவன விரிவாக்கத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிரந்தர வேலை வாய்ப்பு,தொழில் திறன் படித்து பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலைவாய்ப்பு, நிறுவன ஊழியர்களின் வாரிசுகளுக்கு 3 ஆண்டு பயிற்சி அடிப்படையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் தவிர்க்கப்பட்டன. எனவே என்எல்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு என்பது கானல் நீராகவே மாறிவிட்டது.

என்எல்சி 2-ம் சுரங்கம் முன்பு வாரிசு வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை தொழிலாளர்களிடம் வழங்கும் திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர்

இந்தச் சூழலில் இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளிகளாக பணிபுரிந்தவர்கள் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி, நீதிமன்றம் மூலம் பணி நிரந்தரத்துக்கான உத்தரவாத்தைப் பெற்றனர். அதனடிப்படையில், ஒப்பந்தத் தொழிலாளர்களாக சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே நிறுவனத்துக்கு தேவையான பொறியாளர்கள் பணி சேர்ப்பில் வட இந்தியர்களே அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும், உள்ளூர் மாவட்ட மக்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நிறுவனத்தில் பணிபுரியும் வாரிசுகளுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பயிற்சி அடிப்படையிலான வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பிரதானக் கோரிக்கையை முன்வைத்து, பிரச்சார இயக்கம் நடத்தி வரும் திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர், நெய்வேலி சுற்று வட்டார மக்களிடையே ‘வாரிசுக்கு வேலை’ என்ற விண்ணப்பத்தை விநியோகித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, “இன்றைய சூழலில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது குதிரை கொம்பாக மாறி விட்டது. எனவே தான் நாங்கள் பணிபுரிந்துவரும் இதே நிறுவனத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த ‘வாரிசுக்கு வேலை’ என்ற திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். அதன் தொடக்கமாக வாரிசு வேலை கோரிக்கைக்கு ஆதரவு தரும் தொழிலாளர்களிடம் விண்ணப்பம் அளித்து, அதில் வாரிசுகளின் கல்வித் தகுதி குறித்த விவரம் உள்ளிட்டவைகளை அளிக்குமாறு கோரியுள்ளோம். அதற்கு தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பும் உள்ளது” என்றார்.

இது தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்களில் ஒன்றான அதொஊச தலைவர் வெற்றிவேலுவிடம் கேட்ட போது, “எங்களது சங்கத்தின் பிரதான கோரிக்கையே ‘வாரிசுக்கு வேலை’ என்பது தான். இது தொடர்பாக நிறுவனத்துடன் பேசி வருகிறோம். மேலும், இன்கோ-சர்வ் பிரிவில் இருந்து நிரந்தரம் செய்யப்படும் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, அவர்களுக்காக புதிய ஊதிய விகிதம் அமைப்பது தொடர் பாகவும் பேசி வருகிறோம்” என்றார். அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு தொழிற்சங் கமான தொமுச நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, அவர்கள் வாரிசு வேலை கோரிக்கைத் தொடர்பாக, மத்திய நிலக்கரித் துறை செயலரை சந்திக்க சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.

x