எல்.முருகன் ஊரில் குடிநீர் தொட்டி அறையில் செயல்படும் தபால் நிலையம்!


நாமக்கல்: நாமக்கல் அருகே மத்திய இணை அமைச்சரின் சொந்த ஊரில் குடிநீர்த் தொட்டி அறையில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் கோனூர் கிராமத்தில் உள்ள கிளை தபால் நிலையத்தில் கோனூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிறு சேமிப்பு, நிரந்தர வைப்புக் கணக்கு உள்ளிட்ட வரவு செலவுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பதிவுத் தபால் உள்ளிட்ட கடிதப் போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தபால் அலுவலகத்துக்கு கட்டிட வசதியில்லாத நிலையில், அங்குள்ள குடிநீர் தொட்டி அறையில் கடந்த 15 ஆண்டுகளாக தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், தொட்டி பகுதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் வலுவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கிளை தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: கோனூர் தபால் நிலையம் பல்வேறு கிராம மக்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், போதிய வசதியின்றி தபால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கட்டிடம் வலுவிழந்த நிலையில் உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

புதிய கட்டிடம் கட்டித்தரக் கோரி, நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பு அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனின் சொந்த கிராமத்தில், மத்திய அரசு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் அலுவலகம் குடிநீர் தொட்டி அறையில் செயல்படுவது வேதனையாக உள்ளது. எனவே, கிளை தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர்கள் கூறினர்.

x