சாட்ஜிபிடி சரிதம் -28; ஏஐ செய்யும் சூழ்ச்சி!


ஏஐ

சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகளின் பின்னே மறைந்திருக்கும் சார்பு (AI Bias) நிஜ வாழ்க்கையில் உண்டாக்க கூடிய பலவிதமான பிரச்சனைகளை பார்த்தோம். ஒரு பக்க சார்பு மட்டும் அல்ல, தரவுகள் சார்ந்த வேறுபட பிரச்சனைகளும் ஏஐ சேவையில் ஒளிந்திருக்கின்றன. உதாரணமாக, ஏஐ சூழ்ச்சி செய்து மனிதர்களை தவறாக வழிநடத்தும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஏஐ சேவைகள் ஊடுருவி வரும் நிலையில், ஏஐ நுட்பம் சூழ்ச்சி பற்றி பேசப்படுவது அதிர்ச்சி அளிக்கலாம். ஏஐ தொடர்பான எத்தனையோ ஆபத்துகளில் இதுவும் ஒன்று என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த ஏஐ சூழ்ச்சி பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஏஐ சூழ்ச்சி என்றதும், ஏஐ நுட்பம் கைமீறிப்போய் மனித குலத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் வாய்ப்பு பற்றி மிகையாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இத்தகைய எதிர்கால ஆபத்துகளை பற்றிய கவலையை விட, ஏஐ நுட்பம் நிகழ்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை முதலில் கவனித்தாக வேண்டும்; கட்டுப்படுத்தியாக வேண்டும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், ஏஐ நுட்பம் தவறான நோக்கில் கையாளப்படும் வாய்ப்பையே ஏஐ சூழ்ச்சி என்கின்றனர். அதாவது, மனிதர்களை கண்காணிக்கவும், அவர்களை குறிப்பிட்ட விதத்தில் செயல்பட தூண்டவும் ஏஐ நுட்பத்தை பயன்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். சர்வாதிகாரிகள் அல்லது குறுகிய நோக்கம் கொண்ட தலைவர்கள் இதை செய்யக்கூடும். ஏன், லாப நோக்கிலான நிறுவனங்களும் இதை செய்யலாம்.

ஏஐ சார்பு

தனிநபர்களின் இணைய செயல்பாடுகளை கொண்டு அவர்களுடைய இணைய பழக்கம், சமூக ஊடக பதிவுகள், பகிர்வுகள் உள்ளிட்டவை தொடர்பான தரவுகளை சேகரிப்பதும்; இந்த தரவுகளை கொண்டு தனிநபர்கள் பற்றிய சித்திரங்களை உருவாக்கி கொண்டு அதற்கேற்ப விளம்பர வலை விரிப்பதும்; இன்னும் பிற விதங்களில் பயனாளிகளை வழிநடத்துவதும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. இதை அல்கோரிதம்களின் ஆதிக்கம் என்கின்றனர்.

இணைய யுகத்தில் பயனாளிகள் தங்களைப் பற்றி அறிந்திருப்பதைவிட சமூக ஊடக அல்கோரிதம்கள் அவர்களைப்பற்றி அதிகம் அறிந்திருப்பதாக சொல்லப்படுவதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். சமூக ஊடக பக்கத்தில் ஒரே மாதிரியாக தகவல்கள் தோன்றுவது முதல், டிக்டாக் அல்லது யூடியூப் டைம்லைனில் குறிப்பிட்ட வீடியோக்கள் வரிசை கட்டுவது வரை பலவிதங்களில் அல்கோரிதம்களின் ஆதிக்கத்தை உணரலாம்.

அமேசான் தளத்தில் பயனாளிகள் வாங்கிய புத்தகங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பிடித்திருக்க கூடிய தொடர்புடைய புத்தகங்களை முன்வைக்கும் எளிய பரிந்துரை சேவையாக அறிமுகமான ஏஐ கணிப்பு இப்போது, விளம்பர நோக்கில் மிகத் தீவிரமாக பல்வேறு இணைய மேடைகளில் பயன்படுத்தும் அளவுக்கு மாறியிருக்கிறது.

இந்தப் போக்கின் நீட்சியாக, மனிதர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களை குறிப்பிட்ட விதமாக செயல்பட வைக்கும் வகையில் ஏஐ நுட்பத்தை பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தரவுகள் மற்றும் டிஜிட்டல் பிரிவான சிசிரோ (CSIRO’s Data61) கீழ் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் மூன்றுவிதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் சோதனையில், கம்ப்யூட்டருடன் மனிதர்கள் ஒருவிதமான விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டனர். பொய் கரன்சியை வெல்வதற்காக சிவப்பு அல்லது நீல நிற பட்டன்களை கிளிக் செய்யும் வகையில் இந்த விளையாட்டு அமைந்திருந்தது. இந்த விளையாட்டின் போக்கில் மனித பங்கேற்பாளரின் செயல்பாட்டை கவனித்த ஏஐ நுட்பம், அவர்கள் தேர்வு செய்யும் போக்கை குறித்து வைத்துக்கொண்டு, அடுத்த முறை அவர்கள் என்னவிதமான தேர்வை மேற்கொள்ளக்கூடும் என்பதை கணிப்பதில் 70 சதவீதம் வெற்றி பெற்றதாக தெரிய வந்துள்ளது.

ஏஐ வணிக அல்காரிதங்களின் திணிப்பு

இன்னொரு சோதனையில் குறிப்பிட்ட வகை அடையாளம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் போது பங்கேற்பாளர்கள் பட்டனை அழுத்த வேண்டும் மற்றும் வேறு வகை அடையாளம் தோன்றும் போது பட்டனை அழுத்தாமல் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த செயல்பாட்டிலும் மனித பங்கேற்பாளர்கள் அடுத்த நடவடிக்கையை கணிப்பதில் ஏஐ நுட்பம், ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.

மூன்றாவது சோதனையில், அறக்கட்டளை ஒன்றுக்கு பணம் கொடுக்கும் வகையில் முதலீடு செய்வதற்காக பல கட்டங்களாக போட்டி வைக்கப்பட்டது. இந்த போட்டியிலும் ஏஐ நுட்பம் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஏஐ நுட்பம், மனிதர்களின் தேர்வுகளை கவனித்து அதற்கேற்ப காய் நகர்த்தி அவர்களை குறிப்பிட்ட விதமாக செயல்பட வைக்கும் சாத்தியம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வு வரம்புகளை கொண்டது என்றாலும், மனித செயல்பாடுகளை கவனித்து, மனிதர்கள் செயல்படக்கூடிய வித்ததை ஏஐ நுட்பம் கொண்டு கணிக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. நடைமுறையில் இதை பலவிதமாக பயன்படுத்தலாம் என்கின்றனர். உதாரணமாக, தேர்தல் அல்லது கொள்கை முடிவு தொடர்பான விஷயங்களில், குறிப்பிட்ட விதமாக தேர்வு செய்ய மனிதர்களை ஏஐ நுட்பம் கொண்டு வழிநடத்தலாம் என்கின்றனர்.

விளம்பர நோக்கில் பார்த்தால், ஒருவரது வாங்கும் தேர்வுகளை அடிப்படையாக கொண்டு, அவரை குறிப்பிட்ட ஒரு பொருளை ஏஐ கொண்ட வாங்க வைக்கலாம் என்றும் சொல்கின்றனர். சர்வாதிகாரிகள் கையில் இத்தகைய நுட்பம் கிடைத்தால் எப்படி பயன்படுத்துவார்கள் என யோசித்துப் பாருங்கள்.

ஆனால், இந்த உத்தியை நல்ல விதமாகவும் பயன்படுத்தலாம் என்கின்றனர். உதாரணத்திற்கு பயனாளிகள் செயல்பாடுகளை கவனித்து அவர்களை ஆரோக்கியமான முறையில் உணவு பழக்கத்தை தேர்வு செய்ய வைக்கலாம். அதே போல, ஆபத்தை ஏற்படுத்தும் இணைய பக்கங்களை கிளிக் செய்யாமல் தடுக்கலாம்.

பாஸ்வேர்டு சார்ந்த நிதி மோசடி போன்ற சம்பங்கள் அதிகரித்துள்ளன அல்லவா? இது போன்ற மோசடிகளில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கவும் ஏஐ நுட்பத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர். பயனாளிகள் செயல்பாட்டை கண்காணிக்கும் ஏஐ நுட்பம், அதிக விழிப்புணர்வு இல்லாதவர்கள் மோசடி இணைப்பை கிளிக் செய்ய முற்படும் முன் தலையிட்டு எச்சரிக்கை செய்வதும் சாத்தியமே என்கின்றனர்.

ஏஐ தேர்வு

மோசடி வலையில் மனிதர்கள் விழாமல் தடுக்கப்படும் சாத்தியம் நல்லவிதமான பலனாக தோன்றினாலும் மறைந்திருக்கும் ஏஐ நுட்பம் மனிதர்களின் செயல்பாட்டை கண்காணித்து அவர்களது பழக்கங்களை கணித்து அதனடிப்படையில் வழிகாட்டக்கூடிய சாத்தியம் திகைக்க வைப்பதாகவே இருக்கிறது.

ஏஐ நுட்பங்களுக்கு தரவுகள் கொண்டு பயிற்சி அளித்தால் அவற்றை இஷ்டம் போல செயல்பட வைக்கலாம் என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கலாம். இந்த ஆபத்துகளை உணர்ந்தே வல்லுனர்கள், ஏஐ நுட்பம் உருவாக்கப்படும் விதம் மற்றும் பயன்படுத்தப்படும் விதங்களில் கட்டுப்பாடு தேவை என பேசத் துவங்கியிருக்கின்றனர். குறிப்பாக ஏஐ நுட்பங்களை இயக்கும் அல்கோரிதம்கள் அமைப்பில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் வலியுறுத்த துவங்கியுள்ளனர்.

ஏஐ நுட்பங்கள் செயல்படும் விதத்தில் நம்பிக்கை மிக முக்கியம் என்றும் வலியுறுத்துகின்றனர். இதற்கேற்ப ஏஐ சட்டங்களை கொண்டுவருவது அரசுகளின் கடமை என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஏஐ சட்டங்கள் மட்டும் அல்ல, ஏஐ அறம் பற்றியும் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. அவை குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)

இதையும் வாசிக்கலாமே...

x