சென்னையில் இன்று தொடங்குகிறது அயலகத் தமிழர் தினவிழா: 58 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்!


அயலகத் தமிழர் தினவிழா

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அயலகத் தமிழர் தின விழா நடத்தப்படுகிறது. 3-ம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலகத் தமிழர் தின விழா சென்னையில் இன்று தொடங்குகிறது.

அயலகத் தமிழர் தின விழா(கோப்பு படம்)

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அயல்நாடுகளில் வாழும் 1400-க்கும் மேற்பட்டோரும், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்களும் இதில் பங்கேற்க பதிவு செய்துள்ளன. முதல் நாளான இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை(ஜன.12) முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துவதுடன் ‘எனது கிராமம்’ என்னும் முன்னோடித் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக 'வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தாங்கள் பண்பாட்டுச் சுற்றுலா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை முதல்வர் வழங்குகிறார். இரண்டு நாள் நிகழ்வில் அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள் தலைமையில் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

x