அதிவேக வாகனங்களை கண்டறிய ‘ஸ்பீடு ரேடார் கன்’ @ திண்டுக்கல்


சத்திரப்பட்டியில் நான்கு வழிச்சாலையில் ‘ஸ்பீடு ரேடார்கன்’ மூலம் வாகனங்களின் வேகம் அளவிடப்படுகிறது.

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்குவழிச் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய ‘ஸ்பீடு ரேடார் கன்’ பொருத்தப்பட்டு வருகிறது. இதில் சென்சார் உதவியுடன் பைக் முதல் கனரக வாகனங்கள் வரை துல்லியமாக வேகம் அளவிடப்படுகிறது.

மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் திண்டுக்கல் காமலாபுரம் - பொள்ளாச்சி வரை நான்குவழிச் சாலை திட்டப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. பொள்ளாச்சி - மடத்துக்குளம், மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் காமலா புரம் வரை என 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 131.96 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,649 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

பல இடங்களில் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சில இடங்களில் அணுகு சாலை பணி, மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நான்குவழிச் சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் முன்பே பணிகள் நிறைவடைந்த பகுதி வழியாக மதுரை, திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், மதுரைக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

நான்குவழிச் சாலையாக இருந்தாலும் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்லும்போது வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபத்தை தடுக்கவும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறியவும், தற்போது ‘ஸ்பீடு ரேடார் கன்’ எனப்படும் தானியங்கி வேக அளவீட்டு கருவி பொருத்தப்பட்டு வருகிறது. இதன் அருகே வாகனங்களின் எண்களை துல்லியமாக படம் பிடிக்கும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

வாகனங்களின் எண்ணை இரவு நேரங்களிலும் துல்லியமாக பதிவு செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள பகுதியில் இருந்து 200 மீ. தொலைவில் வரும் வாகனத்தின் வேகத்தை ‘சென்சார்’ மூலம் துல்லியமாக அளவிட்டு டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் 100 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லும் வாக னங்களுக்கு வேகத்தை குறைக்கவும் எச்சரிக்கை அறிவிப்பு ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நான்கு வழிச்சாலை முழுமையாக பயன் பாட்டுக்கு வரும்போது அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

x