நாகர்கோவில்: பத்மனாபபுரம் தொகுதியில் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு சுற்றுலா மாளிகை புதர்களுக்குள் சிக்கியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உதயகிரி கோட்டை உள்ளது. இங்கு வனத்துறையினரால் பல்லுயிர் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், டச்சுப்படை தளபதி டிலனாய் நினைவிடம் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோட்டையின் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா மாளிகை உள்ளது. இது திருவிதாங்கூர் ஆட்சிக் காலத்தின் போது கட்டப்பட்டதாகும். குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பின்னர், இந்த மாளிகை தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
மிகவும் பழமை வாய்ந்த இந்த மாளிகையில் இரு வி.ஐ.பி. அறைகளும், 3 சாதாரண அறைகளும் உள்ளன.பத்மனாபபுரம் நகராட்சியில் அமைந்த ஒரே சுற்றுலா மாளிகை இது மட்டுமே. இந்நிலையில் ஓடுகள் மற்றும் மரங்களால் கட்டப்பட்ட இக்கட்டிடத்தின் மேற்கூரைகள், முறையாக பராமரிக்கப்படாததால், சுற்றுலா மாளிகைக்குள் மழைநீர் ஒழுகுகிறது. அங்கிருந்த மரப்பொருட்கள், கட்டில், நாற்காலிகள் போன்றவை வீணாகின.
இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளி, நகர கூட்டுறவு வங்கி, திருவட்டாறு சுற்றுலா மாளிகை, கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம், உதயகிரி சுற்றுலா மாளிகை ஆகியவை உட்பட 14 பழமையான கட்டிடங்களை புனரமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
இதன்படி, உதயகிரி சுற்றுலா மாளிகை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக திறக்கப்பட்ட இம்மாளிகை அரசு அதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல், மக்கள் பிரதிநிதிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், இம்மாளிகையைப் பராமரிக்க உரிய பணியாளர்கள் இன்றி மீண்டும் பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டது. இதனால் மாளிகையைச் சுற்றிலும் புதர்கள் அடர்ந்து வளர்ந்து, சுற்றுலா மாளிகை அதற்குள் புதைந்து போனது. விஷ உயிரினங்களின் புகலிடமாக மாறியதால் தற்போது இப்பகுதி மர்ம மாளிகையாகவே தென்படுகிறது.
அருகிலேயே பத்மனாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் உள்ள நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ், உதயகிரி சுற்றுலா மாளிகையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுத்துள்ளது.
பத்மனாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ள இத்தொகுதியில், அரசு சுற்றுலா மாளிகை பாழ்பட்டு கிடப்பது மனவேதனை அளிப்பதாகவே உள்ளது. எனவே, பழமைவாய்ந்த உதயகிரிகோட்டை சுற்றுலா மாளிகை மீண்டும் பாழடைந்து போய்விடாமல் தடுக்க, உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கென உரிய பணியாளரை நியமிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு இம்மாளிகையை திறந்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.