ரூ.100 கோடி ஒதுக்கீட்டால் வேகம் எடுக்குமா பழநி - ஈரோடு ரயில் பாதை திட்டம்?


பழநி ரயில் நிலையம்

பழநி: 3 மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால எதிர்பார்ப்பான, பழநி - ஈரோடு ரயில் பாதை திட்டத்துக்கு நடப்பு மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திருவிழா காலங்களில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல், பழநியில் இருந்து தினமும் படிப்பு, வியாபாரம் சம்பந்தமாக ஏராளமானோர் திருப்பூர், ஈரோடுக்கு சென்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து மஞ்சள், காங்கயம் பகுதியில் இருந்து கைத்தறி துணிகள், கிரானைட் மற்றும் கல், ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன.

இதேபோல், பழநியிலிருந்து அரிசி, காய்கறிகள், தானியங்கள் திருப்பூர், ஈரோடு, சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வழித்தடத்தில் ரயில் பாதை அமைத்தால் ரயில்களில் பொருட்களை அனுப்புவதன் மூலம் ரயில்வே துறைக்கும் வருவாய் கிடைக்கும் சூழல் நிலவியது.

3 மாவட்டங்களுக்கான திட்டம்: 1922-ல் பழநியில் இருந்து தாராபுரம், காங்கயம், சென்னிமலை, பெருந்துறை வழியே ஈரோடுக்கு 91 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இது திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய திட்டமாக பார்க்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, 3 மாவட்ட மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இவை எதையும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. 2005-ம் ஆண்டு பெயரளவில் மட்டும் பழநி - ஈரோடு ரயில் பாதை அமைக்க ஆய்வு தொடங்கியது. பின்னர் அந்த பணியும் கைவிடப்பட்டது.

நிதி ஒதுக்கீடு: 2022-ம் ஆண்டு மத்திய அரசின் ‘கதி சக்தி’ திட்டத்தில் ஈரோடு - பழநி வழித்தடத்தை சேர்ப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்தது. தொடர்ந்து, ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. முதல் கட்டமாக, சென்னிமலை, காங்கயம், தாராபுரம், பழநி தொப்பம்பட்டியில் நில அளவீடு பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், நடப்பு மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மூன்று மாவட்ட மக்களிடையே புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இனியும் இத்திட்டத்தை கிடப்பில் போடாமல் பழநி - ஈரோடு ரயில் பாதை திட்டத்தை விரைவாக முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய்: இதுகுறித்து பழநி ரயில் உபயோகிப்பாளர் நலச் சங்க தலைவர் எஸ்.வி.நாகேஸ்வரன் கூறியதாவது: பழநியிலிருந்து தாராபுரம் வழியே ஈரோடுக்கு பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து 3 மணி நேரம் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால், முதியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏரளாமானோர் பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். 3 மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமான பழநி - ஈரோடு ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தினால் குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயணம் செய்யலாம்.

நாகேஸ்வரன்

ரயில் பாதை அமைக்கப்பட்டால் பழநியில் இருந்தும், ஈரோடு, திருப்பூரில் இருந்தும் ரயில்களில் மஞ்சள் உள்ளிட்ட விளைபொருட்கள், கிரானைட் கற்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பலாம். பயணிகள் கட்டணம் மூலம் மட்டுமின்றி சரக்குகள் மூலமாகவும் ரயில்வே நிர்வாகத்துக்கு அதிகமான வருவாய் கிடைக்கும். இத்திட்டத்தை மீண்டும் கிடப்பில் போடாமல் விரைவாக பணிகளை தொடங்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு ரூ.100 கோடி போதாது. கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வரை செல்லும் ரயிலை, திருச்செந்தூர் வரை இயக்க வேண்டும், என்று கூறினார்.

x