ஓசூர்: அஞ்செட்டி அருகே கிடப்பில் உள்ள தொட்டல்லா காட்டாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி, பாலதொட்டனப்பள்ளி, குந்துக்கோட்டை, கல்லுப்பாலம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பெய்யும் கனமழையின்போது, பெருக்கெடுத்து ஓடிவரும் மழை நீர் அஞ்செட்டி வனப் பகுதியில் உள்ள யானை விழுந்த பள்ளம் என்ற ஆற்றில் கலக்கிறது.
வனப்பகுதியில் 46 கிமீ பயணம்: மேலும், அஞ்செட்டி வனச் சரகத்தில் உள்ள குந்துக்கோட்டை மலைப்பகுதியில் மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் காட்டாற்று நீர் அஞ்செட்டி அருகே ஒன்றாகச் சங்கமித்து காவிரியின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் கலக்கிறது.
அங்கிருந்து அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 46 கிமீ தூரம் பாய்ந்தோடி வரும் தொட்டல்லா ஆறு தமிழக, கர்நாடக மாநில எல்லையில் உள்ள ராசிமணல் அருகே காவிரியில் கலக்கிறது.
இந்நிலையில், தொட்டல்லா ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் காமராஜர் முதல்வராக இருந்த காலம் தொட்டுத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும், இன்று வரை அணைக் கட்டும் திட்டம் நிறைவேறவில்லை.
ரூ.25 கோடியில் திட்டம்: இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்ட கடந்த 1999- 2000-ம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை ரூ.25 கோடி மதிப்பீடு செய்து, இத்திட்டத்துக்காக வனப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையறிந்த கர்நாடக மாநில அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அணை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் அணைக் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, இப்பகுதியில் பாசன நீர் தேவை ஏற்பட்டுள்ள நிலையில், இப்பகுதி மழை நீர் வீணாகக் காவிரியில் கலப்பதைத் தடுக்கும் வகையில் தொட்டல்லா ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் முயற்சி: இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் கணேஷ் ரெட்டி மற்றும் விவசாயிகள் சிலர் கூறியதாவது: தொட்டல்லா ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சர்வே பணி நடந்தது. மேலும், அணை கட்டும் திட்டத்துக்கு தேர்வான பகுதியில் கற்கள் நடப்பட்டன. ஆனால் திட்டம் நிறைவேறவில்லை.
அதன் பின்னர் கடந்த 1980-ம் ஆண்டும் பொதுப்பணித்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அருகே மேட்டூர் அணை இருப்பதால், அணை கட்ட முடியாது என்றும். அணை கட்டினால் தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலை துண்டிக்கப்பட்டு சுமார் 10 கிமீ சுற்றி வரவேண்டும் என காரணம் காட்டி மீண்டும் திட்டம் நிறைவேறவில்லை.
ஏரிகளை நிரப்பும் திட்டம்: இதேபோல மரியாளம் கிராம வனப்பகுதியில் தொட்டம்மா, சிக்கம்மா என இரு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை அகலப்படுத்தி மழைக் காலங்களில் தண்ணீரைச் சேமித்து கால்வாய் மூலம் இப்பகுதியில் உள்ள மற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பினால் இப்பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஆனால், இத்திட்டமும் செயல்படுத்தவில்லை. இதனால், மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தொட்டல்லா உள்ளிட்ட காவிரி துணை ஆறுகளிலிருந்து 10 டிஎம்சி நீர் வீணாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாகக் காவிரி ஆறு கடந்து சென்றாலும், இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. எதிர்கால பாசன மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கிடப்பில் உள்ள தொட்டல்லா அணை கட்டும் திட்டம் மற்றும் தொட்டம்மா, சிக்கம்மா ஏரிகளிலிருந்து கால்வாய் மூலம் பிற ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் திட்டத்தை மீண்டும் நீர்வளத்துறை மூலம் ஆய்வு செய்து, திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.