மீண்டெழும் சுற்றுலாத் துறை: திருச்சிக்கு வெளிநாட்டு பயணிகளின் வருகை உயர்வு


திருச்சி: கரோனா தொற்று பரவல் காலத்துக்குப் பிறகு திருச்சிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என சுற்றுலாத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி சுற்றுலாத் துறை 2022-ம் ஆண்டைவிட 2023-ம் ஆண்டில் 66 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதேபோல, உள் நாட்டு பயணிகளின் வருகை 47 சதவீதம் அதிகரித்திருப்பது சுற்றுலாத் துறையின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஆனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்றாலும், தொற்று நோய்களின் போது சீர்குலைந்து கிடந்த சுற்றுலாத் துறைக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள பல்வேறு தொழில் துறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது.

மத்திய மண்டலத்தில் கோயில்கள், பாரம்பரிய இடங்கள் போன்றவை மிகவும் விரும்பப்படும் இடங்களாக உள்ளன. இவற்றில், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி மற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் ஆகியவை முதன்மையான இடங்களாக உள்ளன.

திருச்சி மாவட்ட சுற்றுலாத் துறை புள்ளிவிவரப்படி, 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 76,560 பேர், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2,03,65,852 பேர் என மொத்தம் 2,04,42,412 பேர் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர். அதேவேளையில், 2023-ம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை வெளிநாட்டு பயணிகள் 1.27 லட்சம், உள்நாட்டு பயணிகள் 2.98 கோடி என மொத்தம் 2.99 கோடியாக உயர்ந்துள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையம், தங்கும் வசதிகள், நுழைவு அனுமதிச் சீட்டு உள்ள தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் முக்கிய கோயில்கள் உட்பட 32 இடங்களில் இருந்து இந்தத் தரவுகள் சுற்றுலாத் துறையால் சேகரிக்கப் பட்டுள்ளன. கரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளில், 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரை திருச்சிக்கு 3.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேபோல, ஜனவரி மற்றும் மார்ச் 2020-க்கு இடையே கரோனா தொற்று பரவலின்போது, 1 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திருச்சிக்கு வந்துள்ளனர். பெரும்பாலும் கிராமப் புறங்களில் நடைபெறும் பொங்கல் பண்டிகை நிகழ்வுகளைக் காண ஜனவரி- மார்ச் மற்றும் நவம்பர்- டிசம்பர் ஆகிய மாதங்கள்தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவையாகக் கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு ஜூன், ஆகஸ்ட் போன்ற சீசன் இல்லாத மாதங்களிலும்கூட 10,000-க்கும்மேற்பட்ட வெளிநாட்டினர் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, “சர்வதேச சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து, இங்குள்ள பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை ஆராய்வதற்காக வருகின்றனர். விமானம், ரயில் இணைப்புகள் மிகவும் மேம்பட்டுள்ளன. இது போன்ற காரணிகள் திருச்சி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது” என்றார். மேலும், சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஸ்பெயின், ஜெர்மனி, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியநாடுகளைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளில் 95 சதவீதம் பேர் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் தங்குவதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதைதக்கவைக்க, தனியார் பங்குதாரர்களுடன் இணைந்து கரூர் மாவட்ட எல்லையான முசிறி மற்றும் தோகை மலைப் பகுதிகளில் வேளாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இதில், சுற்றுலாப் பயணிகளை தனியார் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்கள் பாரம்பரிய விவசாய நடைமுறைகள், கால்நடை மேலாண்மை ஆகியவற்றை கண்டுகளிக்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையிலும் திட்டமிடப்படும் என தெரிகிறது.

x