சாட்ஜிபிடி சரிதம் -27; செயற்கை நுண்ணறிவில் மறைந்திருக்கும் சார்பு!


சாட் ஜிபிடி

ஏஐ வளர்ச்சி பாதையில் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில், மனித அறிவையும், ஆற்றலையும் மிஞ்சக்கூடிய திறனை செயற்கை நுண்ணறிவு பெறக்கூடும் என்றும், இந்த கட்டத்திற்கு பிறகு மனித குலம் செயற்கை நுண்ணறிவுக்கு அடிமையாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் ’சிங்குலாரிட்டி’ (singularity) என வர்ணிக்கப்படும் இந்த தொழில்நுட்ப ஓர்மை நிலை ஒருபோதும் சாத்தியம் இல்லை என்று வாதிடுபவர்களும் இருக்கின்றனர்.

ஏஐ நுட்பத்தால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் ஒரு பக்கம் இருக்க, நிகழ்காலத்தில் ஏஐ நுட்பத்தால் ஏற்பட்டு கொண்டிருக்கும் அல்கோரிதம் சார்பு பிரச்சனையை உடனடியாக கவனித்தாக வேண்டும் என ஏஐ வல்லுனர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர். இந்த சார்பு நிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வல்லுனர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகள், மனிதர்கள் போலவே உரையாடி, மனிதர்கள் போலவே ஆக்கத்தில் ஈடுபடும் திறன் பெற்றிருப்பதால், இணைய உலகில் இப்போது ஆக்கத்திறன் ஏஐ (Generative AI ) அலை வீசிக்கொண்டிருக்கும் சூழலில், ஏஐ மென்பொருள்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் ஆக்கத்தில் ஈடுபடுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. எனவே ஏஐ ஆக்கத்தை மனித ஆக்கத்திற்கு நிகராக கருத முடியாது என்றும் வாதிடப்படுகிறது.

மனிதர்கள் வழங்கும் தரவுகள் சார்ந்த பயிற்சி அடிப்படையில் மனிதர்கள் போலவே ஏஐ மென்பொருள்களும் செயல்படுவதாக புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் மனிதர்களிடம் மறைந்திருக்கும் பலவித ஒரு பக்க சார்புகளையும், ஏஐ மென்பொருள்கள் வரித்துக்கொள்வதே ஏஐ சார்பு என கொள்ளப்படுகிறது. இந்த ஏஐ சார்பு பரவலாக இருப்பதோடு, நடைமுறை வாழ்கையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.

சாட்ஜிபிடி

இந்த ஏஐ சார்பு காரணமாக, எதிர்காலத்தில் ஒருவரது வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் என்கின்றனர். நோயாளிகளுக்கான சிகிச்சை மறுக்கப்படும் விபரீதம் உண்டாகலாம், இன்னும் பலவிதங்களில் பாதிப்பு ஏற்படபலாம் என்றும் எச்சரிக்கின்றனர். இதன் தீவிரத்தை உணர்த்தக்கூடிய எண்ணற்ற உதாரணங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு தீவிரமாக விவாதிக்கப்பட்டும் வருகின்றன.

பணி நியமன உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். பெரிய நிறுவனங்களில் வேலைக்கு நபர்களை அமர்த்தும் பொறுப்பை ஏஐ மென்பொருளிடம் ஒப்படைத்துவிடலாம் என்கின்றனர். மனிதர்களைவிட செலவு குறைந்ததாகவும், செயல்திறன் மிக்கதாகவும் ஏஐ மென்பொருள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே இத்தகைய ஏஐ மென்பொருளை வேலைக்கான நேர்காணலுக்கு பயன்படுத்துகின்றன. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களும் கூட, விண்ணப்பங்களை வடிகட்டும் ஆரம்ப கட்ட தேர்வை ஏஐ மென்பொருளிடம் ஒப்படைக்கின்றன.

மென்பொருள்களின் இந்த தேர்வில், குறிப்பிட்ட இனம் அல்லது குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாமல் போகும் அபாயம் இருப்பது தெரியுமா? ஏஐ சார்பால் இந்த நிலை உண்டாகலாம் என்கின்றனர். தகுதி வாய்ந்த நபர்களை வேலைக்குத் தேர்வு செய்யும் நோக்கத்துடன் ஏஐ மென்பொருள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த மென்பொருள் தன்னை அறியாமல், கருப்பினத்தவர்களை அல்லது பெண்களை நிராகரிப்பது நடைமுறையில் நடந்திருக்கிறது தெரியுமா?

வேலை தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்பட்ட அல்கோரிதம், ஏனோ பெண்களை குறிப்பிட்ட பணிகளுக்காக தகுதி குறைந்தவர்களாக கருதியதே இதற்கு காரணம். இதையே ஏஐ சார்பு என்கின்றனர். இது ஏதோ விதிவிலக்கான சம்பவம் அல்ல; தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், வேலை தேர்வுக்காக உருவாக்கிய ஏஐ மென்பொருளின் செயல்பாட்டில் இத்தகைய சார்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அந்த மென்பொருளை விலக்கி கொண்டது.

இன்னொரு சம்பவத்தில், அமெரிக்க மருத்துவ அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அல்கோரிதம் குறிப்பிட்ட பிரிவினருக்கு சிகிச்சையை மறுப்பதாக அமைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதே போல, மனித முகங்களை கண்டறியும் முகம் உணர்தல் (Facial Recognition AI) நுட்பம் சார்ந்த அல்கோரிதம், கருப்பினத்தவர்களின் முகங்களை கண்டறிவதில் சிக்கல் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இத்தகைய நுட்பங்கள் பயன்படுத்தப்படும்போது கருப்பினத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஏஐ

இவ்வளவு ஏன், கூகுள் தேடலை இயக்கும் அல்கோரிதத்திலும் பலவித சார்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கூகுளில், தலைமை அதிகாரி என தேடினால் அது பெரும்பாலும் ஆண் அதிகாரிகளின் படங்களையே பட்டியலிடுகிறதே தவிர, பெண்கள் அதிகாரிகளை பட்டியலிடுவதாக தெரியவில்லை என்கின்றனர். சாட்ஜிபிடி போன்ற ஆக்கத்திறன் சேவையான மிட்ஜர்னியில், புகைப்படங்களை உருவாக்க கட்டளையிட்டாலும், அதன் வெளிப்பாடு பெரும்பாலும் வெள்ளை நிறத்தவர்கள் சார்ந்தாக அமைவதாக கருதப்படுகிறது.

அநேகமாக எந்த ஒரு ஏஐ அல்கோரிதமும் இத்தகைய சார்புக்கு விலக்கல்ல என்கின்றனர். இந்த சார்பு நிலையே ஏஐ தொடர்பான உடனடி பிரச்சினை என்றும் சொல்லப்படுகிறது. ஏஐ சேவையால் ஊழியர் குறைப்பு என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நிலையில், ஏஐ நுட்பத்தின் செயல்பாடு சார்பு நிலை கொண்டதாக அமைவது சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கும், இன்னும் பிற பிரிவினருக்கும் பாதகமாக அமையலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. இதை உடனடியாக கவனித்தாக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

ஏஐ செயல்திறன் பற்றி வியப்பு மேலிட பேசி வரும் சாமானியர்களுக்கு, ஏஐ நுட்பத்தின் பின்னே இப்படி ஒரு பிரச்சனை இருப்பது திகைப்பாக இருக்கலாம். எனினும் இதற்காக காரணங்களை புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஏஐ மென்பொருள்கள் சார்பு கொண்டதாக அமைய, அவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளில் மறைந்திருக்கும் சமூகத்தின் மறைமுக சார்பு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

உதாரணத்திற்கு, குறிப்பிட்ட வேலைகள் குறிப்பிட்ட நபர்களுக்கே பொருத்தமானது எனும் தப்பெண்ணம் சமூகத்தில் பல மட்டங்களில் இருக்கிறது. வேலை வாய்ப்புக்கான காரணிகளை உருவாக்க நிஜ உலக தரவுகளை திரட்டும் போது, அவை குறிப்பிட்ட பிரிவினருக்கு சார்பாகவும், இன்னொரு பிரிவினருக்கு எதிராகவும் அமையலாம்.

இதே போல, தீவிரவாதி என குறிப்பிட்டாலும், குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் அடையாளம் கொண்ட உருவங்களே உருவாக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அழகு எனும் கருத்தாக்கத்திலும் இத்தகைய சார்பு நிலையை ஏஐ மென்பொருள் ஆக்கங்களில் காணலாம் என்கின்றனர்.

ஏஐ மென்பொருள்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் தரவுகளில் ஒளிந்திருக்கும் மனித சார்பே இதற்கு அடிப்படை காரணம் என்கின்றனர். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளுக்கு அடிப்படையாக அமையும் இயந்திர கற்றல் என்பது, தரவுகளில் இருந்து தானாக கற்றுக்கொள்ளும் திறனை குறிக்கிறது. இங்கு கற்றல் என்பது தரவுகள் முன்வைக்கக் கூடிய அமைப்பு அல்லது வார்ப்பு என புரிந்து கொள்ளலாம். எக்கச்சக்கமான தரவுகளை அளித்தால் இயந்திர கற்றல், அவற்றில் இருந்து தனக்கான செய்திகளை பெற்றுக்கொள்ளும். இதற்கு அல்கோரிதம் வழிகாட்டுகின்றன.

ஏஐ

ஆனால், நடைமுறை வாழ்க்கையில் சமூகத்தில் பல்வேறு சார்புகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இருக்கின்றனவே. இவை நம் ஆக்கங்களில் பிரதிபலிப்பது போலவே, நாம் அளிக்கும் தரவுகளிலும் ஊடுருவி இருக்கின்றன. விளைவு, இந்த உள்ளீடு அடிப்படையில் ஏஐ அளிக்கும் வெளிபாட்டிலும் ஏதேனும் ஒரு வகையில் இந்த சார்பு வெளிப்படுகிறது. ஆக, மனித மனங்களில் இருக்கும் சார்பு ஏஐ ஆக்கங்களிலும் பிரதிபலிக்கிறது.

எனவே தான் ஏஐ சார்பை சரியாக எதிர்கொள்ளவில்லை எனில் சமூகத்தில் ஏஐ நுட்பத்தின் தாக்கம் எதிர்மறையாக இருக்கும் என்றும், ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வை இது மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். யோசித்துப் பாருங்கள், சாட்ஜிபிடி, மொழிமாதிரி என்ற வகையில், பிரதானமாக இணையத்தில் இருக்கும் எழுத்து வடிவிலான தரவுகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிழைகளும், பொய்களும், முக்கியமாக சார்புகளும் இருப்பது இயல்பானதே. ஆக, சாட்ஜிபிடியின் ஆக்கங்களின் முழு உண்மையை எதிர்பார்ப்பதற்கு இல்லை. மனித பொய்களும், சார்புகளும் அதில் எட்டிப்பார்க்கவே செய்யும்.

சாட்ஜிபிடி போன்ற சேவைகள், எத்தகைய தரவுகளால், எப்படி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது. அல்கோரிதம் உருவாக்கியவர்களின் சார்பும் இதில் சேர்ந்து கொள்ளுமானால், அதன் விளைவுகளை சிந்தித்துப்பாருங்கள்.

இதற்கு தீர்வாக, தரவுகள் சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதோடு, இந்த செயல்முறை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்துகின்றனர். முக்கியமாக, சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தும் இந்த செயல்முறையை ஒரு சில தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட்டு சமூகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்கின்றனர்.

(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)

x